சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.. கடந்த 3 நாட்களாகவே கயல்விழியின் அரசியல் வருகை குறித்த தகவல்கள் பரபரபத்து வரும் நிலையில், நேற்றைய தினம் நடந்த இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகிறது.. எதற்காக இந்த சந்திப்பு? விஜய்யிடம் கயல்விழி அழகிரி சொன்னது என்ன? இதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வட்டமடித்து வருகின்றன.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகக் கருதப்பட்ட தென்மண்டலத்தில் ஒருகாலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் மு.க.அழகிரி.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான இவரது குடும்பத்தினர், கடந்த சில காலங்களாகவே தி.மு.க. தலைமையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டு வருகிறது.. இந்நிலையில், ஒரு அதிரடியான நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தளபதி விஜய்யை, மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் சந்தித்துப் பேசியுள்ளது, மாநில அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த பல்வேறு யூகங்களை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தளபதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, பல்வேறு தரப்பினரும் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், அழகிரியின் குடும்பத்தைச் சேர்ந்த கயல்விழி, சென்னை தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதலமைச்சரைச் சந்தித்திருப்பது, திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மு.க.அழகிரி குடும்பத்தினர், தவெகவின் உதயத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த நிலையில், இந்த சந்திப்பானது, அடுத்தக்கட்ட அரசியலுக்கு நகர்ந்துள்ளது. நீண்ட காலமாகவே நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வரும் கயல்விழி, செய்தியாளர்களிடம் பேசும்போது, "நான் நீண்ட காலமாகவே முதலமைச்சர் விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்துள்ளேன். ஒரு ரசிகையாகவும், தமிழகத்தின் புதிய முதலமைச்சராக அவர் பொறுப்பேற்றுள்ளதற்கும் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்" என்றார். எனினும், இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான ஒன்றாக மட்டும் பார்க்கப்படவில்லை. காரணம், நேற்றைய தினம் முதலமைச்சரை சந்தித்து, தனது அரசியல் விருப்பங்களையும் வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, தளபதி விஜய்யின் தலைமையிலான தவெகவில் இணைவது குறித்தும், வரவிருக்கும் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் தன்னுடைய விருப்பத்தையும், ஆர்வத்தையம் கயல்விழீ வெளிப்படுத்தினாராம்.. மதுரை என்பது மு.க.அழகிரியின் அரசியல் செல்வாக்கு மிகுந்த பகுதியாகும். அந்தப் பகுதியில் இன்றும் தனக்கென ஒரு தனிப்பட்ட ஆதரவுத் தளத்தை வைத்திருக்கும் அழகிரி குடும்பத்தின் ஆதரவு, தவெகவிற்கு கிடைத்தால், அது வரும் உள்ளாட்சித் தேர்தல்களில் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். ஸ்டாலினின் தலைமையிலான தி.மு.க.வின் செயல்பாடுகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து ஏற்கனவே பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தவர் கயல்விழி. இப்போது தி.மு.க. ஆட்சியை இழந்து, விஜய் தலைமையில் புதிய ஆட்சி மலர்ந்துள்ள சூழலில், கயல்விழியின் இந்த அரசியல் காய்நகர்த்தல் மிகவும் கூர்மையாக கவனிக்கப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் கயல்விழி பங்கேற்றபோதே, அவர் திராவிட அரசியலில் இருந்து விலகி புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. இப்போது, நேரடியாக தலைமைச் செயலகத்திற்கே சென்று முதலமைச்சரைச் சந்தித்திருப்பது, அந்த யூகங்களை உறுதிப்படுத்துவது போல அமைந்துள்ளது. எனினும் இதுகுறித்து கயல்விழி தரப்பிலோ, தவெக தரப்பிலோ எந்தவிதமான செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளியகவிலலை. அதேசமயம், இந்த சந்திப்பினால் திமுக தரப்பில் ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மு.க.அழகிரி மீண்டும் ஒரு மாற்று அரசியலை உருவாக்க முனைகிறாரா அல்லது தனது மகள் கயல்விழியை தவெகவின் மூலம் களமிறக்கி, மதுரையில் மீண்டும் தனது அரசியல் இருப்பை நிலைநாட்டப் பார்க்கிறாரா என்ற கேள்விகள் எழுகின்றன. என்னதான் ரசிகையாகச் சந்தித்தேன் என்று கயல்விழி தரப்பில் கூறப்பட்டாலும், வரவிருக்கும் நாட்களில்தான் இந்தச் சந்திப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையான அரசியல் முடிவுகள் என்னவென்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்...!!அழகிரி மகள் தவெகவில்?
கயல்விழி விஜய் சந்திப்பு
முதலமைச்சரிடம் கோரிக்கை
மாறுது மதுரை அரசியல் களம்
திமுகவில் புதிய புயல்