உயில் இல்லாமல் இறந்தால் சொத்து யாருக்கு? எப்போது உயிலை பதிவு செய்யலாம்? இது 2ம் அவசியம்

  • சென்னை: நாம் சம்பாதித்த சொத்துகள், பூர்வீக சொத்துகள் என வாழ்நாள் முழுவதும் சேர்த்தவற்றை, நமக்கு பிறகு யார் பெற வேண்டும் என்பதை தெளிவாக சொல்லி வைப்பதுதான் உயில்.. குடும்பத்தில் பிற்காலத்தில் சொத்து தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இது உதவும்... ஆனால் உயில் எழுதிவிட்டால் அதை கட்டாயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!

    Advertisement

    உயிலை பதிவு செய்வது கட்டாயம் கிடையாது. இந்தியப் பதிவுச் சட்டம், 1908-ன் கீழ் உயில் பதிவு செய்வது கட்டாயமில்லை... எனினும், சட்டப்படி முறையாக தயாரிக்கப்பட்டு, 2 சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட பதிவு செய்யப்படாத உயிலும் செல்லுபடியாகும்.

    Advertisement

    உயிலை பதிவதால் பிளஸ் பாயிண்ட்ஸ்

    அதேசமயம், உயிலை பதிவு செய்து வைத்திருப்பதில் சில முக்கியமான நன்மைகளும் உள்ளன.. சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதன் மூலம் உயிலுக்கு அதிகாரப்பூர்வமான அரசுப் பதிவு கிடைக்கிறது... அதேபோல வருங்காலத்தில், இந்த உயில் உண்மையானதா, அதில் உள்ள கையெழுத்து சரியானதா என்று வாரிசுகள் கேள்வி எழுப்பினால், பதிவு செய்யப்பட்ட ஆவணம் முக்கியமான சான்றாக இருக்கலாம்.

    மேலும், அசல் உயில் தொலைந்து போவது, யாராவது போலியான உயிலை தயாரிப்பது போன்ற பிரச்சினைகளையும் பதிவு செய்வது ஓரளவுக்கு தவிர்க்க உதவும்.

    உயில் எழுதும்போது இருக்க வேண்டியவை

    Advertisement

    1925-ம் ஆண்டின் இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, உயிலில் சொத்து உரிமையாளர் யார், தனது சொத்தை யாருக்கு வழங்க விரும்புகிறார், அந்த உயிலை Executor அதாவது செயல்படுத்துபவர் யார் என்பது தெளிவாக இருக்க வேண்டும். இதற்காக கடினமான சட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உயில் எழுதுபவரின் விருப்பம் தெளிவாக புரியும்படி இருந்தால் போதும்.

    முக்கியமாக, உயில் எழுதுபவர் கையெழுத்திட வேண்டும். அவருடைய முன்னிலையில் குறைந்தது 2 சாட்சிகளும் கையெழுத்திட வேண்டும்.

    எப்போது பதிவு செய்யலாம்

    சொத்து விற்பனை அல்லது வாங்குதல் போன்ற ஆவணங்களை பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட காலக்கெடு இருக்கும். ஆனால் உயிலைப் பொறுத்தவரை அப்படியான காலக்கெடு எதுவும் கிடையாது. உயில் எழுதுபவர் தனது வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் அதை பதிவு செய்ய சமர்ப்பிக்கலாம்... சொத்து அமைந்துள்ள பகுதி அல்லது உயில் எழுதுபவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

    Advertisement

    பதிவின்போது உயில் எழுதுபவரும் சாட்சிகளும் அசல் உயிலுடன் தேவையான அடையாளம் மற்றும் இருப்பிடச் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். பொதுவாக, உயில் எழுதுபவரும் சாட்சிகளும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அடையாளத்தை உறுதி செய்ய வேண்டியிருக்கும்.

    கட்டணம் எவ்வளவு

    உயில் பதிவு செய்வதற்கான அரசு கட்டணம் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த மாநில அரசின் விதிகளுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். வழக்கறிஞர் மூலம் உயிலை தயாரித்தால், அதற்கான தொழில்முறை கட்டணமும் தனியாக இருக்கலாம்.

    அதனால் உயில் பதிவு செய்யப்படவில்லை என்பதற்காக மட்டும் அது செல்லாததாகிவிடாது. ஆனால் பதிவு செய்து வைப்பது எதிர்காலத்தில் ஆவணத்தின் நம்பகத்தன்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு கூடுதல் ஆதாரமாக அமையலாம்.

    Advertisement

    உயில் இல்லாமல் இறந்தால் சொத்து யாருக்கு?

    ஒருவர் உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது சொத்து தானாகவே ஒருவரின் பெயருக்குச் சென்றுவிடாது. இறந்தவருக்கு பொருந்தும் தனிநபர் வாரிசு சட்டத்தின் அடிப்படையில்தான், அந்தச் சொத்தில் யார் உரிமை பெறுவார்கள் என்பது தீர்மானிக்கப்படும்.

    பொதுவாக கணவன் அல்லது மனைவி, மகன், மகள், பெற்றோர் உள்ளிட்ட சட்டப்பூர்வ வாரிசுகள் சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படி சொத்தில் உரிமை கோரலாம். ஆனால் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கிறார்கள் என்பதற்காக, அனைவருக்கும் சமமான பங்கு கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. இறந்தவருக்கு பொருந்தும் வாரிசு சட்டத்தின்படியே ஒவ்வொருவரின் உரிமையும், பங்கும் தீர்மானிக்கப்படும்.

    Advertisement

    சட்டம் சொல்வது என்ன?

    உயில் இல்லாத நிலையில், முதலில் இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுகள் யார் என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்குத் தேவையான வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று, சொத்தின் உரிமையை வாரிசுகளின் பெயருக்கு மாற்றுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சொத்து, வங்கிக் கணக்கு அல்லது வேறு சொத்துகள் என ஒவ்வொன்றுக்கும் தேவையான நடைமுறைகள் மாறுபடலாம். உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட துறையை அணுகி நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். அதனால் சொத்து யாருக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக உயில் எழுதுவது கட்டாயம் இல்லை.

    உயில் இல்லாவிட்டாலும், அந்த நபருக்கு பொருந்தும் வாரிசு சட்டத்தின் அடிப்படையில் சட்டப்பூர்வ வாரிசுகள் சொத்தில் உரிமை பெற முடியும். ஆனால் உயில் எழுதாமல் விட்டால், யார் வாரிசு, யாருக்கு எவ்வளவு பங்கு என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின்படியே தீர்மானிக்கப்படும்...!!

    English Summary

    Do You Know Who Gets Your Property Without a Will? When Can You Register a Will?