சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் மிக முக்கியமான நிர்வாக மாற்றம் ஒன்று நடக்க போகிறது. பல காலமாகவே தலைமை செயலகத்தின் முதன்மைக் கட்டிடத்தில் இயங்கி வந்த முதலமைச்சரின் அலுவலகம், இப்போது அதே வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட உள்ளததாம்.. இந்தச் செய்திதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக தமிழக முதலமைச்சர்களின் அலுவலகம் என்பது புனித ஜார்ஜ் கோட்டையின் பழமைவாய்ந்த முதன்மை கட்டடத்தில்தான் செயல்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக இங்கு கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது..
தலைமைச் செயலகம் - முதலமைச்சர் அறை அத்துடன் தினந்தோறும் வந்து செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.. இது, நிர்வாக ரீதியாகப் பல்வேறு சவால்களையும் ஏற்படுத்தி வருகின்றன.. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான், முதலமைச்சரின் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற அதிரடி முடிவெடுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 10 அடுக்குமாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில்தான் இந்த புதிய அலுவலகம் அமையவுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய்யின் பிரத்யேக அறையோடு சேர்த்து, அவரது 4 முதன்மைச் செயலாளர்களின் அறைகளும் இந்த தளத்திலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன... இதிலுள்ள ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? இந்த 10-வது தளத்தில் இருந்து பார்த்தால் சென்னை கடலின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் இதன் வடிவமைப்பு அமைந்துள்ளதாம். ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள்.. ஏற்கனவே அந்த தளத்தில் இருந்த பெரிய மாநாட்டு அரங்கம் மற்றும் உணவக பகுதியும் இருந்தது.. அங்குதான் முதலமைச்சர் அலுவலகமாக மாற்றும் பணியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் இப்போது விறுவிறுப்பாக துவங்கி உள்ளார்களாம். ,இதனால் அங்கு ஏற்கனவே இயங்கி வந்த தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை, வணிகவரித் துறையின் சில முக்கியப் பிரிவுகளும், வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் இந்த அனைத்து பணிகளையும் முடித்து, புதிய அலுவலகத்தைத் திறந்துவிட வேண்டும் என்பதில் அதிகாரிகள் மும்முரமாகி உள்ளனர். ஆனால், இத்தகைய மாற்றம் 2 வேறு கருத்துக்களை உண்டுபண்ணி வருகிறது.. தமிழக வரலாற்றுப் பக்கங்களில், பாரம்பரியமாக இயங்கி வந்த முதன்மை கட்டிடத்திலிருந்து தனது அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்றும் முதல் முதலமைச்சர் என்ற பெயரையும் ஜோசப் விஜய் இதன் மூலம் பெறுகிறாராம்.. இது தவெகவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. ஜோதிடர்கள் சொன்னார்களா? அதேசமயம், இப்படியொரு மாற்றம் தேவையா? என்ற கேள்வியும் எழுகிறது.. ஒரு பிரபல சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தை மாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகின்றன.. இது மிகப்பெரிய தவறான முடிவாக இருக்கும்... காமராஜர் காலத்திற்கு முன்பிருந்தே முதலமைச்சர் அறையாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த இடத்திற்கு பின்னால் ஒரு பெரிய மரபும் வரலாறும் இருக்கிறது. சில வசதிக் குறைபாடுகளுக்காக அந்த மரபுகளை விட்டுக்கொடுக்கக் கூடாது. பிரிட்டிஷ் மன்னரின் கிரீடமும் செங்கோலும் பல நூறு ஆண்டுகள் பழமையானது என்பதால் அதை மாற்றிவிடுவார்களா? யாரோ ஜோதிடர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக முதலமைச்சர் அறையை மாற்றுவது வரலாற்றுத் திரிப்பாகவே முடியும். மக்களிடம் வெறுப்பு? தலைமை செயலகத்தை மாற்றுவது என்பது வேறு, முதலமைச்சர் அறையை மாற்றுவது என்பது வேறு.. இத்தகைய முடிவுகள் சாதாரணப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வெறுப்பையே போய் முடியும்" என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். எது எப்படியோ, நிர்வாக வசதியை மேம்படுத்தவும், முதலமைச்சரை சந்திக்க வரும் பொதுமக்களுக்கான நடைமுறைகளை முறைப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றம், கோட்டை நிர்வாகத்தில் எந்த அளவுக்குப் புதிய மாற்றங்களைக் கொண்டுவரப் போகிறது என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.