சென்னை: பாம்பு என்றாலே யாருக்குதான் பயம் இல்லை.. ஆனால், பாம்புகள் ஏன் தன் சட்டையை அதாவது தோலை உரிக்கின்றன.. காட்டுப் பகுதிகளிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ ஒரு பாம்பு தன் பழைய தோலை உரிக்கும் தருணத்தை எதேச்சையாக பார்த்தால், அது மனிதர்களை பழிவாங்குவதற்காகவே என்ற பயம் பலரிடம் இன்றும் உண்டு. அந்தப் பயத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் என்ன?
ஊர்ந்து செல்லும் உயிரினங்களில் பாம்புகளின் இடப்பெயர்ச்சி என்பது ஸ்பெஷலானது.. கால்கள் கிடையாது என்பதால், வளைந்து நெளிந்து செல்ல வயிற்றுப்புற செதில்கள்தான் அதற்கு உதவுகின்றன.
முழு உடலையும் தரையில் தேய்த்து நகர்வதால் செதில்கள் அதிக தேய்மானத்தை சந்திக்கின்றன. மனிதர்களைப் போலவே பாம்புகளும் உயிர்வாழும் காலம் வரை சிறிது சிறிதாக வளர்ந்துகொண்டே இருப்பதால், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப தோல் இறுக்கமாவதை தவிர்க்கவும், பழைய செதில்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் அவற்றுக்கு வேறு வழியில்லை. அதனால்தான், மரங்கள் பழைய இலைகளை உதிர்ப்பது போல, பாம்புகள் தங்களின் மேல்புறத்திலுள்ள செலோபேன் போன்ற பழைய தோலை உரிக்கின்றன.. இப்படி தோலை உரித்துக்கொள்வது, நுண்ணுயிரிகள் மற்றும் மாசுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. தோலை உரிக்கும்போது, பாம்பு தன்னுடைய தலையின் முன்பகுதியை ஏதாவது கடினமான பாறை அல்லது மரத்தின் மீது உரசி மேலுறையை கிழிக்க தொடங்குமாம்.. அப்போது தோலில் விரிசல் உண்டாகி, பெரிய கற்கள் அல்லது செடிகளில் தன்னுடைய உடலை நெளித்து மேல் தோலை நீக்கிவிட்டுப் பளபளப்பான புதிய தோற்றத்துடன் வெளியேறும். இனப்பெருக்க காலத்திற்கு முன்போ அல்லது முட்டையிடுதல் மற்றும் குட்டி ஈன்றதற்கு பிறகோ இந்தத் தோலுரிக்கும் நிகழ்வு அதிகளவில் நடைபெறும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு பாம்பு மிகக் குறைந்த கால இடைவெளியில் அடுத்தடுத்து சட்டை உரித்தால், அது வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் அதன் நீளம் அதிகமாகிறது என்பதற்கான அறிகுறியாகும். ஆனால், தோலை உரிக்கும் காலகட்டத்தில் அதை பார்த்தால் பாம்பு பழிவாங்கும் என்ற பேச்சு பரவலாக உள்ளது.. உண்மையை சொல்லப்போனால், தோல் உரிக்கும் காலகட்டத்தில் பாம்புகள் வழக்கத்தை விட மிகவும் பலவீனமாகவும், சோர்வாகவும், அவுகரியமாகவும் உணருமாம். கண்களின் மேலும் தோல் மூடியிருப்பதால் சரியாக பார்க்கவும் முடியாது. அதனால்தான் அவை இரை தேடுவதை நிறுத்திவிட்டு, ஒரு இருட்டான மறைவிடத்தை தேர்ந்தெடுத்துப் பதுங்கியிருக்கும்.. அந்த இக்கட்டான நேரத்தில் யாராவது அதனைத் தொந்தரவு செய்தால், அது தன்னுடைய பாதுகாப்பிற்காக தாக்க முற்படும். குறிப்பாக, தோல் உரியும் நேரத்தில் கண்களுக்கு அருகிலுள்ள பகுதி சரியாக நீங்காமல் போனால் பாம்பின் பார்வைக்கு சிக்கலாகி எரிச்சலடையும். இப்படிப்பட்ட நேரத்தில் அருகில் செல்லும் மனிதர்களை அது தற்காப்புக்காக தாக்கிவிடும்.. தோலை உரிக்கும் போது, ஏதாவது சத்தம் கேட்டால் அப்படி தாக்க வரலாம்.. மற்றபடி மக்களை பழிவாங்குவற்காக பாம்பு தாக்குகிறது என்று தவறாக நம்புகிறார்கள். எனவே, தோலுரிக்கும் தருணத்தில் பாம்புகளுக்கு தொந்தரவு தராமல் விலகிச் செல்வதே மனிதர்களுக்கு எப்போதுமே பாதுகாப்பான வழியாகும். கண்கள் முதல் வால் வரை மொத்த உடம்பையும் ஒரே நேரத்தில் உரித்துக் கொள்ளும் ஒரே உயிரினம் பாம்பு மட்டுமே. தன்னுடைய உடலில் புதிய தோல் உருவாகியுள்ளது என்று உணரும் போது, அது உடனே பழைய தோலை உரித்துக் கொள்ள ஆரம்பிக்குமாம்.. தோல் உரிக்காத பாம்பு வகைகள் உலகில் இல்லையாம்.. கிட்டத்தட்ட 3 ஆயிரம் வகை பாம்புகள் தங்கள் தோலை உரித்துக் கொள்கின்றன.. ஒரே நேரத்தில் பாம்பு தன் முழு தோலையும் உரித்துக் கொள்ளும். எத்தனை முறை வேண்டுமானாலும் தோலை உரித்து கொள்ளும்.. சாப்பிடும் உணவு, இருப்பிடம், வெப்பம், ஈரப்பதம் அடிப்படையில் தோலை உரிக்கும் எண்ணிக்கை மாறும்" என்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள்..!!!சட்டையை உரிக்கும் பாம்பு
பாம்பு தோல் உரிப்பது ஏன்
பாம்பு பழிவாங்குமா
பார்வைக்கு சிக்கலாகிவிடும்
ஒரே உயிரினம் பாம்புதான்