ஃபைல்களை திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

  • சென்னை: சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசும் போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருவதாகவும், பாடல்கள் பாடி வருவதால் சட்டப்பேரவையா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா என்ற சந்தேகம் வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். மேலும், முதல்வர் தன்னிடம் இருப்பதாகக் கூறிய 3 ஆவணங்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறார் என்றும், ஃபைல்களை திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

    Advertisement

    தமிழக சட்டப்பேரவையில் நீதி, சிறை மற்றும் சட்டத் துறை, எரிசக்தித் துறை, இந்து சமய அறநிலையத் துறைகளில் மாநிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியாதவது: இந்த அவையை முடிந்த அளவுக்கு நீங்கள் சிறப்பாக வழிநடத்திச் செல்கிறீர்கள், எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பை முடிந்த அளவுக்கு கொடுக்கிறீர்கள்.

    Advertisement

    எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆளுங்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் பதில் சொல்லும்போது ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். அவைக் குறிப்பில் இருந்து அவற்றை சரியாக நீக்கிவிடுகிறீர்கள்.

    சட்டமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக எதிர்க்கட்சியினர் பேசுவதைவிட ஆளுங்கட்சியினர், அமைச்சர்கள் பேசுவதை அவைக் குறிப்பில் இருந்து நிறைய நீக்கி வரலாறு படைத்துள்ளீர்கள். இந்த அவை நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நாங்கள் கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அதிசயப்படும் அளவிற்கும், ஆச்சரியப்படும் அளவிற்கும் பதில்களை கொடுக்கிறார்கள்.

    Advertisement

    கேள்விகள் கேட்டால் பதில் சொல்லலாம். இப்போது பாட்டெல்லாம் பாடுகிறீர்கள். எங்களுக்கே சில சமயம் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா, இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும், நீக்கப்படும் காட்சிகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும்போது இவற்றை சோஷியல் மீடியாக்களிலும், யூடியூப்பிலும் ரீல்ஸாக கட் செய்யப்பட்டு, அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.

    இதனால், அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போகிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நேற்று முன்தினம் பேரவையில் பேசிய முதல்வர் தன்னுடைய மேசையில் 3 ஆவணங்கள் இருப்பதாகவும், அதை திறக்க வைத்துவிடாதீர்கள் எனவும் எங்கள் அரசை குற்றம் சாட்டும் வகையில் கூறியிருந்தார். தயவு செய்து முதல்வர் அந்த ஃபைல்களை திறந்து பார்க்க வேண்டும். அதன் மீது அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Advertisement

    எதற்காக பயப்படுகிறீர்கள், எதற்காக காலதாமதம் செய்கிறீர்கள். இதையே 3 மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஃபைல்களை திறக்க ஜோசியக்காரர் சொல்ல வேண்டுமா. நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

    English Summary

    Udhayanidhi Stalin questioned the delay in acting on three files and asked if the Chief Minister needed an astrologer to open them.