சென்னை: நடிகர் தனுஷ் தனது அரசியல் வருகை குறித்து தெளிவான நிலையை வெளிப்படுத்தாத போது, நாமாக கற்பனை செய்து பேச தேவையில்லை என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். தனுஷ் தனது முடிவை அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.
சமீப காலமாக நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற செயல்பாடுகளை தீவிரமாக்கி இருக்கிறார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் தனுஷ் கல்வி உதவி, ஆட்டோ உதவி உள்ளிட்டவற்றை செய்தார். தொடர்ந்து ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி இருக்கிறார்.
சட்டசபை தொகுதி வாரியாக நற்பணி மன்ற கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறார். அண்மையில் டெல்லிக்கு சென்ற தனுஷ் 2 நாட்கள் முகாமிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தனுஷ்க்கு பாஜக ஆதரவு அளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தை தனுஷ் கூட்டி இருந்தார். அப்போது சுமார் 2,500க்கும் அதிகமாக மகளிரணி நிர்வாகிகளை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட தனுஷ், அவர்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கு கொடுத்து சர்ப்ரைஸ் செய்தார். அந்த காமாட்சி விளக்கில் தாமரை சின்னமும் இடம்பெற்றது விவாதப் பொருளாக மாறியது. இதனால் தனுஷின் அரசியல் வருகை தீவிரம் அடைந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. ஓம் படத்தின் ரிலீஸ்க்கு பின் தனுஷ் அரசியல் இன்னும் தீவிரம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் தனுஷ் நற்பணி மன்ற நிர்வாகிகள் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் உடன் நெருங்கி பழகி வரும் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கருணாஸ், நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்து இன்னும் தெளிவான நிலையை வெளிப்படுத்தாத போது, நாமாகவே ஏன் யூகங்களின் அடிப்படையில் கற்பனை செய்து பேச வேண்டும். தேவையில்லாமல் கண், மீசை எல்லாம் வைத்து பேச வேண்டும். அவர் தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார்.