சென்னை: இந்த மாதம் முதியோர் உதவித்தொகை குறிப்பிட்ட நாட்களில் வந்து சேரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் முதியோர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். இந்நிலையில் தற்போது உதவித்தொகை பெற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்) எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மகன்களும், மகள்களும், உற்றார் உறவினர்கள் கைவிட்ட நிலையும், முதியோர்கள் இன்றும் உயிர்வாழ்வதற்கு முக்கிய காரணம் அரசு வழங்கும் உதவித்தொகைதான். அந்த சொற்ப தொகையை நம்பிதான் லட்சக்கணக்கான முதியவர்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்த உதவித்தொகையும் சரியான நேரத்திற்கு வந்த சேராததால் முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இப்படி இருக்கையில், உதவித்தொகை பெற வேண்டும் எனில், வங்கிக்கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று சிபிஎம் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து மாநில செயலாளர் பெ.சண்முகம் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதால் பெரும் அவதிகளுக்கு ஆளாகி இருப்பதாக மூத்த குடிமக்கள் பலர் தெரிவித்துள்ளார்கள். ஆதார் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள், பெயர்களில் உள்ள வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்சனைகளால் முதியோர் ஓய்வூதியம் பல்லாயிரக் கணக்காளவர்களுக்கு தடைபட்டிருக்கிறது என்றும், முதியோர் ஓய்வூதியம் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாததால் மூத்த குடிமக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் பெரும் எண்ணிக்கையில் வந்து முறையிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெயில் சுட்டெரிக்கும் வேளையில், இத்தகைய அலைச்சல் உடல்ரீதியாகவும் அவர்களை பாதிக்க கூடியது. ஆதார் மையங்களுக்கு, வங்கிகளுக்கு உடன் அழைத்துச் செல்ல உதவி இல்லாதவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். அழைத்து இந்த திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மன உளைச்சலையும், அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதை கருத்தில் கொண்டு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கப்படுவது என்பதை கட்டாயம் ஆக்க கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.