எ.வ.வேலு வழக்கில் அதிரடி திருப்பம்.. லுக் அவுட் நோட்டீசுக்கு தடை .. ஆனாலும் வைக்கப்பட்ட செக்

  • சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எவ வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் ஜூலை 15ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக்அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை விதித்துள்ளது. அதேபோல் தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரும் எவ வேலுவின் மனுக்கு ஜூலைம் 27ம் தேதிக்குள் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Advertisement

    தி.மு.க., முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில் 2022 ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்த பணி மேற்கொள்ளாமலேயே பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பூர், கரூரில் இந்த ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் மனுவில் குற்றம்சாட்டியிருந்தது. ரூ.3.23 கோடி பெற்று முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டியிருந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் புகார் மனு மீது எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    Advertisement

    ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், கணக்காளர்கள் மற்றும் கரூரைச் சேர்ந்த 'சங்கரானந்த் இன்ப்ரா' ஒப்பந்த நிறுவனம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசர் வழக்குப் பதிவு செய்தனர்.

    அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள். அத்துடன் திருவண்ணாமலையில் உள்ள அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடு, கரூர், திண்டுக்கல், கோவை என 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினார்கள்.

    Advertisement

    அப்போது, முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் வழக்குக்கு தொடர்புள்ள நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத ரூ.40 லட்சம் கைப்பற்றப்பட்ட தாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியிருந்தது. தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எ.வ. வேலுவிடம் நேரில் விசாரணை நடத்த சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஜூலை 3 நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என எ.வ.வேலுவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

    கடந்த ஜூலை 3 ஆம் தேதி விசாரணையில் எ.வ. வேலு ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் குழுவினர் ஆலந்தூர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், "முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக அவர், சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெறுவதற்காக ஜூன் 26-ம் தேதி சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    Advertisement

    அங்கு சிகிச்சையில் இருப்பதால், லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை இருக்கிறது. எனவே, அவர் நேரில் ஆஜராக 10 நாட்கள் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அத்துடன் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியவுடன் அவர் தமிழகம் திரும்பி, போலீஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்று கூறப்பட்டது.

    இதனிடையே எ.வ.வேலுவை தேடப்படும் நபராக அறிவித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர். இந்த 'லுக் அவுட் நோட்டீசை' ரத்து செய்யக்கோரியும், தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனறும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எ.வ.வேலு, புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் எவ வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. வரும் ஜூலை 15ம் தேதி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக்அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையை விதித்துள்ளது. அதேபோல் தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரும் எவ வேலுவின் மனுக்கு ஜூலைம் 27ம் தேதிக்குள் தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஜூலை 27ம் தேதி வரை எந்த கடும் நடவடிக்கையும் (கைது உள்பட) எடுக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

    English Summary

    The Madras High Court has stayed the lookout notice issued against former DMK Minister E.V. Velu, subject to the condition that he appears on July 15.