சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் வாகன பிரசாரத்துக்கு தடை காவல்துறை தடை விதித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாகன பிரசாரம் செய்ய திராவிடம் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிலையில் காவல்துறையினரின் இந்த திடீர் தடை விதிப்பால் திராவிடர் கழகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எந்த ஒரு அரசும் திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுத்ததில்லை. ஆனால் பெரியாரை கொள்கை தலைவராக கொண்ட இந்த அரசு எங்கள் பரப்புரைக்கு தடை விதித்துள்ளது. தமிழக அரசு அனுமதி தரவில்லை என்றால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என கலி. பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர் ஜாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரியும் திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுக்க வாகன பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 18 ஆம் தேதியே அனுமதி கேட்டபோது, அந்தந்த காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறையினர் முதலில் தெரிவித்துள்ளனர். தற்போது திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுக்க வாகன பரப்புரைக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 13 நாட்கள் கழித்து திடீரென நீட் தேர்வுக்கு எதிரான திராவிடர் கழகத்தின் வாகன பிரசாரத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் திடீரென காவல்துறை தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கலி பூங்குன்றன் கூறியதாவது:- ஒட்டுமொத்தமாக நாங்க அனுமதி கொடுக்க தேவையில்லை. நீங்கள் எங்கெல்லாம் வாகன பரப்புரை மேற்கொள்ள இருக்கிறீர்களோ அந்தந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என சொன்னார்கள். 18 ஆம் தேதி நாங்கள் கொடுத்த இந்த மனுவிற்கு காவல் துறை தரப்பில் இவ்வாறு தெரிவித்தனர். ஆனால் இன்றைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிறகு போலீசார் அனுமதி மறுக்கிறார்கள். திடீரென இந்த பயணம் நடக்கின்ற நேரத்தில் 13 நாட்கள் கழித்து அனுமதி இல்லை என்று சொல்வது, நீதித்துறை ரீதியிலும் தவறு.. சட்ட ரீதியிலும் தவறு.. தி.க இதுபோன்ற பரப்புரை பயணம் மேற்கொள்வது புதிது கிடையாது. 1938-இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சியில் இருந்து சென்னை வரைக்கும் நடந்தே வந்தனர். அப்போதெல்லாம் எந்த அரசும் அனுமதி மறுக்கவில்லை. திராவிடர் கழகத்தினை பொறுத்தவரை எந்த போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் இதில் அசம்பாவிதமோ, வன்முறையோ ஏற்பட்டது கிடையாது. இப்படி இருக்கும் போது இந்த அரசு அனுமதி மறுத்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்கள் கொள்கை தலைவர் பெரியார் என்று சொல்கின்ற அரசு தான் இதற்கு அனுமதி மறுத்து இருக்கிறது. பெரியாரின் கொள்கையே சமூக நீதி.. அதற்காகத்தான் இந்த போராட்டமே.. எந்த காரணத்திற்காக இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை விளக்கவில்லை. இன்று தொடங்க இருந்த இருசக்கர வாகன பிரச்சாரத்தை திராவிடர் கழகம் ஒத்தி வைத்துள்ளது. நீதிமன்றத்தை அணுகுவோம். எங்கள் பிரசார போராட்டத்திற்கு அனுமதி வழங்காவிடில் தடையை மீறி மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்" என்று கூறினார்.போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
திடீர் என தடை விதித்துள்ளனர்
எதற்காக அனுமதி வழங்கப்படவில்லை?