விஜய் வரும் நேரத்தில் பறந்து விழுந்த டிரோன்.. கோவை விமான நிலையத்தில் உச்ககட்ட பரபரப்பு

  • சென்னை: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. முதலமைச்சர் விஜய் கோவை விமான நிலையம் வந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்றார். விஜய் விமான நிலையம் வந்த நேரத்தில், ஒரு மர்ம டிரோன் பறிமுதல் செய்யப்பட்டது. தடையை மீறி டிரோனை பறக்கவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Advertisement

    கோவை அவிநாசி சாலை சித்ரா அருகே சர்வதேச விமான நிலையம் உள்ளது. அதில் தினசரி 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் செல்கிறது. சார்ஜா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமானம் இயக்கப்படுகிறது. தினசரி பல ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையம் வருகிறார்கள். பயணிகள் வருகைக்கு ஏற்ற வசதிகள் விமான நிலையத்தில் இல்லை.

    Advertisement

    விஜய் தாராபுரம் பிரச்சாரம்

    விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இந்நிலையில் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் விஜய் நேற்று கோவை விமான நிலையம் வந்தார். இதன் காரணமாக விமான நிலையத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த விஜய், பிறகு ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் சென்றார்.

    தாராபுரத்தில் இருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் கோவை வந்து, பிறகு நேற்று மாலை சென்னை சென்றார். இதேபோல தாராபுரத்தில் பிரச்சாரம் செய்வதற்காக விஜய் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தாராபுரத்தில் பிரச்சாரம் செய்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்து, பிறகு சாலை மார்க்கமாக தாராபுரம் சென்றார். பிரச்சாரம் முடித்துவிட்டு விமானம் மூலம் சென்னை சென்றார்.

    Advertisement

    டிரோன் பறிமுதல்

    விஜய் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம் சுற்றுவட்டார பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அந்த பகுதிகளில் 2 நாட்களுக்கு டிரோன் பறக்க தடை செய்து மாவட்ட ஆட்சி தலைவர், மாநகர காவல் ஆணையர் அறிவித்தனர். விஜயை பார்ப்பதற்காக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனால் பாதுகாப்புக்காக அதிகளவிலான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். தடையை மீறி டிரோன் பறக்க விடப்படுகிறதா என்பதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில் கோவை விமான நிலையத்தின் பின்பகுதியில் ஒரு டிரோன் விழுந்து கிடந்தது. விமான நிலைய அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் டிரோனை பறக்கவிட்டது யார் என்பது தெரியவில்லை. அந்த டிரோனை பறிமுதல் செய்த சோதனை செய்தனர். டிரோனில் கேமராக்கள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. விசாரணையில் அது குழந்தைகள் விளையாடும் டிரோன் என்றும் தெரியவந்தது.

    Advertisement

    சதியா என விசாரணை

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள், பீளமேடு காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தைகள் மூலம் தெரியாமல் வந்ததா அல்லது வேறு யாரும் சதி செய்துள்ளனரா என்று காவல்துறையினர் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Chief Minister Visited Coimbatore Airport while on his way to Dharapuram. However drone flied and landed in Coimbatore Airport sparks tension.