குடிகார குள்ளநரி அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனர்.. ர.ரக்களிடையே பரபரப்பு


  • சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட "குடிகார குள்ளநரி" என்ற வாசகங்கள் அடைங்கிய பேனர் வைக்கப்பட்டிருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேனரில் நேரடியாக யாருடைய பெயரும் இடம்பெறாத நிலையில், அது யாரை குறிவைத்து வைக்கப்பட்டது என்ற விவாதம் எழுந்துள்ளது.

    Advertisement

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வருகை புரிந்தார். இன்று நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் எதிரே அதிமுக தலைமையை விரும்பாத மூத்த தலைவர்களை விமர்சிக்கும் வகையில் பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது அதிமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    Advertisement

    கும்பலாக வந்து ஊளையிட்ட குள்ளநரி

    அந்த பேனரில் எழுதப்பட்டிருப்பதாவது:- "அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ள நரி.. இன்று அனாதையாக வந்து ஓலம் விடும் குடிகார குள்ளநரி" என்ற வாசகங்களுடன் குள்ளநரி முன் அதிக மைக்குகள் இடம்பெற்ற மாதிரி ஒரு படமும், மற்றொரு படத்தில் குள்ளநரி முன் ஒரே ஒரு மைக் இருப்பது போன்றும் படம் இருந்தது. இதே போன்று பேனரின் அடிப்பக்கத்தில், சிங்கம் படம் ஒன்றும் அதனை பார்த்து குள்ளநரி ஊளையிடுவது போன்றும் படம் இருந்தது. இதில் சிங்கம் படத்தில் ஈபிஎஸ் எனவும், குள்ளநரி படத்தில் குடிகார குள்ளநரி எனவும் எழுதப்பட்டிருந்தது. தென் சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    குடிகார குள்ளநரி யார்?

    சில குள்ளநரிகள் ஒன்று கூடி அதிமுக தலைமைக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். கூட்டமாக கூவிய குள்ளநரிகள் இன்று தனித்து நின்று பேசக்கூடிய குள்ளநரிகளாக மாறியுள்ளன. பலர் ஒன்று சேர்ந்து அதிமுக பொதுச்செயலாளருக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். ஆனால் இன்று அவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.. தனியாக நின்று செய்தியாளர்களை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று விமர்சிக்கும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    அதிமுக தலைமை செயலகம் முன்பாக குள்ளநரிகள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை விமர்சிக்கக்கூடியவர்களை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த பேனர் குறித்த விவாதங்கள் அதிமுக ர.ரக்களிடையே அதிகரித்துள்ளது. யாரை குள்ளநரி என விமர்சனம் செய்து வைக்கப்பட்டுள்ளது எனபது அதிமுக ர.ரக்களிடையே விவாதமாகியுளாது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிவி சண்முகம் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலக பகுதியில் இந்த பேனரானது வைக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதிமுகவில் அதிகரிக்கும் உள்கட்சி பூசல்

    சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வென்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிமுக தோல்வி அடைந்ததால், அக்கசியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலக குரல்கள் எழுந்தன. சிவி சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள், விஜய் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு அளித்தனர். எனினும், எஸ்பி வேலுமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அணி மாறினர்.

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ளார். தவெகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே, 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இவ்வாறாக அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில், சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க மறுத்து வருகிறார். விரைவில் கட்சியின் செயற்குழுவை கூட்ட வேண்டும் என்று சிவி சண்முகம் குரல் கொடுத்து வருகிறார். இந்த சூழலில்தான் இன்று சென்னையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

    Advertisement

    நாகை, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள்

    நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர், பேரூராட்சி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்ற நிலையில்தான் அதிமுக அலுவலக பகுதியில் குள்ள நரி வாசகங்களுடன் பேனர் அடித்து வைக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Drunken Fox: A controversial banner displayed opposite the AIADMK headquarters in Chennai has triggered debate within the party. The banner carried indirect criticism using the phrase “Drunken Fox” and featured symbolic images, leading to speculation about whom it targeted.