மின் இணைப்பு துண்டிக்கப்படும்” என மெசேஜ் வந்தால் உஷார்..! சைபர் மோசடி.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

  • சென்னை: "மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என எஸ்.எம்.எஸ் அனுப்பி மின்சார வாரியத்தின் பெயரில் நடைபெற்று வரும் புதிய சைபர் மோசடி மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Advertisement

    இணையம் இன்றைக்கு அத்தியாவசியமாக மாறியுள்ள சூழலில், இணையத்தை பயன்படுத்துபவர்களை குறி வைத்து ஏராளமான மோசடிகள் நடந்தேறி வருகின்றன. சைபர் கிரிமினல்கள் வெவ்வேறு வழிகளில் பொதுமக்களிடம் பணம் பறிப்பு மற்றும் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Advertisement

    அந்த வரிசையில், சென்னை திருவான்மியூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. மின்சார வாரியம் அனுப்பியதாக குறிப்பிடப்பட்ட அந்த செய்தியில், "உங்களுடைய கடைசி மாத மின்சார கட்டணம் 'அப்டேட்' ஆகவில்லை. அதனால் இன்று இரவு 9.45 மணிக்கு பின்னர் உங்களுடைய மின்சார இணைப்பு துண்டிக்கப்படும். 89812 02584 என்ற மின்சார வாரிய எண்ணை உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்" என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மின்சார கட்டணத்தை இறுதி தேதிக்கு முன்னதாகவே தவறாமல் கட்டி வரும் அந்த தனியார் நிறுவன ஊழியருக்கு இந்த தகவல் அதிர்ச்சியை கொடுத்தது. உடனே எஸ்.எம்.எஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தான் ஏற்கனவே மின்சார கட்டணத்தை கட்டிவிட்டதாக தகவல் அனுப்பி உள்ளார். மேலும் முந்தைய மாதங்களில் செலுத்திய தனது 2 மின்சார கட்டண விவரங்களையும் அனுப்பி உள்ளார்.

    Advertisement

    அந்த எண்ணை தொடர்புகொண்டபோது மின்சார கட்டணத்தை 'அப்டேட்' செய்ய தான் உதவுவதாக எதிர்முனையில் பேசியவர் கூறியுள்ளார். மேலும் வாட்ஸ்அப் தொடர்பில் வருமாறு கூறினார். அதில், அந்த நபரின் செல்போன் எண் ஆங்கிலத்தில் 'billupdate EB' என்று சேமிக்கப்பட்டிருந்தது. இதனை மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ எண் என்று நினைத்து அவரிடம் பேசியுள்ளார்.

    அதேசமயம், சென்னை கொட்டிவாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் எம்.பாலசுந்தரியை, அவர் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். அப்போது. அவர் "இதுபோன்று மின்சார வாரியம் நுகர்வோருக்கு தகவல் எதுவும் அனுப்பவில்லை. சைபர் மோசடி பேர்வழிகளாக இருப்பார்கள் எனவே உடனடியாக இணைப்பை துண்டித்துவிடுங்கள்" என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் செல்போன் இணைப்பை துண்டித்ததால், பணம் மட்டுமின்றி தகவல் திருடு போவதும் தவிர்க்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர் உடனடியாக நடந்த சம்பவம் பற்றி புகார் தெரிவிக்க 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இதுபோல, பல்வேறு புகார்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    மின்சார கட்டணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலர் புகார் தெரிவிக்கிறார்கள். மின்சார வாரிய தகவல்களை சைபர் குற்றவாளிகள் திருடி இதுபோன்று மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    போலி குறுஞ்செய்திகளை நம்பி பணத்தையும், தனிப்பட்ட தகவல்களையும் இழந்துவிட வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

    English Summary

    Cyber ​​crime police have urged the public to be cautious of a new cyber scam being perpetrated in the name of the Electricity Board, involving SMS messages claiming that the electricity connection will be disconnected.