'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது?' காவிரி நீர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கேள்வி

  • சென்னை: தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிடாமல் ஏமாற்றும் கர்நாடகா அரசிடம் உரிய நீரை கேட்டு பெற வேண்டும் என முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தர வேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.

    Advertisement

    ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை என்று செய்திகள் வந்துள்ளன.

    இந்நிலையில், கர்நாடக முதலமைச்சர் , கர்நாடக அணைகளில் நீர் நிரம்பிய பிறகுதான் தமிழகத்திற்கு உரிய பங்கு நீர் வழங்கப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியுள்ளதாக நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

    Advertisement

    இதைக் கேட்கும்போது, 'கடலில் அலை எப்போது ஓய்வது, நாம் எப்போது குளிப்பது ? என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது. கர்நாடக அணைகளில் குறிப்பிட்ட அளவு நீர் நிரம்பினாலே திறந்துவிட வேண்டும் என்பதுதான் வழிகாட்டு நெறிமுறைகள். ஆனால், அணைகள் முழுவதும் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறந்துவிடுவோம் என்பது ஒரு மோசடித்தனமான வறட்டுப் பிடிவாதமாகும்.

    உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும், சர்வாதிகாரி போல் நடப்பது ஒரு மாநில முதலமைச்சருக்கு அழகல்ல. பல ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற்று, காவிரி நதிநீர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதை மதிக்காத கர்நாடக முதலமைச்சருக்கு, தமிழக மக்களின் சார்பாக எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Advertisement

    இம்மாதம் 22-ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இக்கூட்டத்தில் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் என்று பொய்க்கால் குதிரை த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீர வேண்டும் என கர்நாடகா கங்கனம் கட்டி கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் உரிமையை எந்த சூழலிலும் விட்டுத் தர மாட்டோம் என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.

    Advertisement

    மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் கூறி வரும் நிலையில், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.

    இந்த அணை கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    English Summary

    Edappadi palanisamy demands CM Vijay to intervene in Cauvery issue and get water for our state for July month. Karnataka has failed to release the allocated water to Tamil nadu.