கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழி போன்றது! எப்போது வேண்டுமானாலும் உடையும்! எடப்பாடி பழனிசாமி

  • சென்னை: கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழி போன்றது, எப்போது வேண்டுமானாலும் உடைந்து சிதறிவிடும் என அதிமுகவின் 55ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தொண்டர்களுக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது: என் உயிரினும் மேலான எனது கழக உடன்பிறப்புகளே!இந்தியத் திருநாடு விடுதலை பெற்ற பிறகு, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய காலத்தில், தமிழக அரசியல் வரலாறில் ஒரு மகத்தான அரசியல் புரட்சியை நிகழ்த்திக் காட்டியவர் நம் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள்!

    Advertisement

    மாநில உரிமைகளை உயர்த்திப் பிடித்து, சமூக நீதியை நிலைநாட்டி, சாமானிய மக்களின் நலனைக் காக்கும் நல்லரசை நிறுவிய பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, அவர் உருவாக்கிய இயக்கத்தைக் சுவீகாரம் செய்து, அண்ணாவின் இதயக்கணியாகத் திகழ்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களையே இயக்கத்தில் இருந்து வெளியேற்றியது தீய சக்தி.

    தீயசக்தி

    அந்தத் தீய சக்தியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும்; அண்ணாவின் இலட்சியங்களை நிலைநாட்டவும்; கோடானு கோடி மக்களின் பேராதரவோடு, 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ஆம் நாள் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கினார் புரட்சித் தலைவர் ! 1977-ஆம் ஆண்டு முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நம் கழகம், புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில் சத்துணவுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது.

    Advertisement

    69 சதவீதம் இடஒதுக்கீடு

    புரட்சித் தலைவரின் மறைவிற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காத்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், தொட்டில் குழந்தைத் திட்டம், 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்குச் சட்டப்பூர்வ பாதுகாப்பு, அம்மா உணவகம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் என எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி, "அமைதி! வளம்! வளர்ச்சி!" என்ற தாரக மந்திரத்தின்படி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, நம் கழகத்தைச் சூழ்ந்த சோதனைகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் மத்தியில், உங்களின் பேராதரவோடும், தமிழக மக்களின் நம்பிக்கையோடும், முதலமைச்சராகப் பதவியேற்று, ஜெயலலிதாவின் நல்லாட்சியைத் தொடர்ந்து நடத்தும் பெரும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தப் பதவியை, மக்கள் பணியாற்ற கிடைத்த மகத்தான வாய்ப்பாகக் கருதி, புரட்சித் தலைவர் ஜெயலலிதா வழியில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

    Advertisement

    அரசு பள்ளிகள்

    அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்ற ஏழை, எளிய மாணாக்கர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை வழங்கினோம். அதன் பயனாக இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் செல்வங்கள் மருத்துவர்களாக உருவாகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்!

    17 மருத்துவக் கல்லூரிகள்

    தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்தோம். மக்களின் குடிநீர்க் தேவைகளை நிறைவேற்ற ஏராளமான கூட்டு குடிநீர்க் திட்டங்களைச் செயல்படுத்தினோம். நீர்நிலைகளைப் பாதுகாக்கப்வும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடிமராமத்துப் பணிகளை முன்னெடுத்தோம்.

    Advertisement

    மெட்ரோ ரயில் திட்டம்

    மெட்ரோ ரயில் திட்டங்கள், சாலை விரிவாக்கப் பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் என தமிழகத்தின் வளர்ச்சிக்காக நாம் தொடங்கிய பல்வேறு திட்டங்களுக்கு, இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது பெயரை ஒட்டிக்கொண்டு உரிமை கொண்டாடும் அளவிற்கு, நம் கழக ஆட்சியில் மகத்தான சாதனைகளை நிகழ்த்திக் காட்டினோம்! இத்தகைய பெருமைமிக்க சாதனைகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலான தியாக வரலாற்றைக் கொண்ட நம் கழகத்தை, எத்தனையோ எதிரிகளும் துரோகிகளும் அழித்துவிடத் துடித்தபோதும், என் உயிரினும் மேலான எனதுறமை கழகத் தொண்டர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் அசைக்க முடியாத பேராதரவோடும், அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து கழகத்தை மீட்டெடுத்து, கம்பீரமாக வீறுநடை போடச் செய்திருக்கிறோம்!

    Advertisement

    தமிழக தேர்தல்

    அதற்குச் சான்றாகத்தான், 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அசாதாரணமான அரசியல் சூழலிலும், கவர்ச்சி அரசியலின் மாயத் தோற்றங்கள் மேலோங்கிய நிலையிலும், அவற்றையெல்லாம் கடந்து, கழகக் கூட்டணி சுமார் ஒரு கோடியே முப்பத்து ஐந்து இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்றதுடன், நம் கழகம் 47 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றெடுத்து, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது!

    கவர்ச்சி அரசியல்

    கவர்ச்சி அரசியல் என்பது நீர்க்குமிழியைப் போன்றது! அது எந்த நேரத்திலும் உடைந்து சிதறிவிடும்! ஆனால், கொள்கையாலும், தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட நம் கழகம், காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் மக்கள் பேரியக்கம்! கவர்ச்சி அரசியலால் மக்களை ஏமாற்றி, குதிரை பேர அரசியலின் துணையோடு தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் இன்றைய ஆட்சியாளர்கள், ஜனநாயகத்தின் மாண்புகளைப் படுகுழியில் தள்ளியதோடு, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறார்கள்!

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் என, சாதாரண மக்கள் அச்சமின்றி வாழ முடியாத சூழல் உருவாகி வருகிறது. இவற்றை இரும்புத் கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய முதலமைச்சரோ, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வினோதத்திலும் வினோதம்! அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டுகிறது! ஏழை, எளிய மக்களும், நடுத்தர குடும்பங்களும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதக்கே திண்டாடுகிறார்கள்! தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக காவ கொடுக்கப்படுகின்றன! ஆட்சியமைத்து சில மாதங்களிலேயே அனைத்து நிலையிலும் தோல்வியடைந்த அரசாக இந்த அரசு மாறி இருக்கிறது!

    மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதைவிட, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எவ்வாறு பலவீனப்படுத்தலாம்; அதன் சட்டமன்ற உறுப்பினர்களை எவ்வாறு குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கலாம்; நம் இயக்கத்தை எவ்வாறு விழுங்கிவிடலாம் என்பதிலேயே ஆட்சியாளர்கள் முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்கள்! அவர்களுக்கு ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!

    சோதனை

    நம் கழகம் அதிகாரத்திற்காக ஒன்று கூடிய கூட்டமல்ல! அது இலட்சியத்தால் ஒன்றிணைந்த இயக்கம்! நம் தொண்டர்கள் புரட்சித் தலைவரின் பாசறையில் பயின்றவர்கள்! எத்தனை சோதனைகள் வந்தாலும் துவாளாதவர்கள்! எத்தனை சூழ்ச்சிகள் அரங்கேறினாலும் வீழாதவர்கள்! அத்தகைய இலட்சிய உறுதிமிக்க தொண்டர்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக, உங்களின் பேரன்பையும் பெரும்பிக்கையையும் பெற்றுத்தான், இன்று இந்த மாபெரும் மக்கள் பேரியக்கத்தின் 'பொதுச் செயலாளர்' எனும் பெரும் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றி வருகிறேன்! எனக்கு கழகம் வேறு; தொண்டர்கள் வேறு அல்ல! கழகமே எனது உயிர்மூச்சு! கழகத் தொண்டர்களே எனது உயிர்நாடி!

    என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுக்கால பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    நூறாண்டுகளை கடக்கும் இயக்கம்

    "இன்னும் நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் புரட்சித் தலைவி ஜெயலலிதா முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றி பயணத்தைத் தொடர்வோம்! இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!

    இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடு, உறுதியோடு களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்! இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    English Summary

    ADMK General Secretary Edappadi Palanisamy wrote a letter to party cadres in the eve of 55 th foundation day of ADMK.