சென்னை: தாராபுரம் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நடுவே ஒரு வித்தியாசமான போட்டி உருவாகியுள்ளது... காவிரி நீர் முதல் கள் விற்பனை தடை வரை பல முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்துள்ள தமிழ்நாடு கள் இயக்கம், தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் துரைமுருகனை நோக்கி ஒரு பெரிய சவாலும் விடுக்கப்பட்டுள்ளது.. அது என்ன சவால்?
கடந்த 29ம் தேதி, தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார்.. அப்போது "கர்நாடகாவில் குறுவை சாகுபடி சாத்தியமானது, தமிழ்நாட்டில் சாத்தியமாகவில்லை. இது குறித்து சட்டப்பேரவையில் யாராவது பேசினார்களா? செங்கோட்டையன், எ.வ. வேலு, கே.என். நேரு போன்ற மூத்த தலைவர்கள் சட்டமன்றத்தில் இருக்கிறார்கள். ஏன் இது குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை?
கள் தடை நியாயமானது என சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாராவது நிரூபித்தால் அவர்களுக்கு இனோவா கார் நாங்கள் கொடுப்போம். மேலும், கர்நாடக அரசு காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் தீர்ப்பை காலில் போட்டு மிதித்து உள்ளது. பவானி ஆற்றினுடைய கரைகளில் காகித தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள், சாராய தொழிற்சாலைகள் ஆகியவை அரசின் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது உண்மைக்கு மாறானது என்று யாராவது நிரூபித்தாலும் நான் அவர்களுக்கு பரிசு தருகிறேன். தமிழ்நாடு அரசு கள் இறக்குமதியை செவி சாய்கிறதோ இல்லையோ, வருகின்ற இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் ஒரு வேட்பாளரை நிறுத்த போகிறோம். மக்கள் செம்மறி ஆடுகளாக இருக்கிறார்களா? அல்லது மக்கள் மக்களாக இருக்கிறார்களா? என்று சோதித்து பார்ப்போம். சினிமா கவர்ச்சியில் ஒரு நடிகரை பார்த்து விசில் அடித்து ஓட்டு போட்டால் இந்த நாடு நாசமாக தான் போகும்" என்றெல்லாம் காட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சென்னையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.. அப்போது அவர் பேசும்போது, "காவிரி உரிமையை மீட்கவும், கள் விற்பதற்கான தடையை நீக்க வலியுறுத்தியும், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் வேட்பாளரை நிறுத்தப்போகிறோம். கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, நீதிபதி கோகுல் தாஸ் பரிந்துரையின்படி கள் மீதான தடையை அரசு நீக்க வேண்டும்.. கள் மீதான தடை நியாயமானது என்பதை நிரூபிக்கும் எம்எல்ஏவுக்கு இனோவா கார் இலவசமாக வழங்கப்படும். காவிரி பிரச்னைக்கு, தினசரி நீர் பங்கீடு மட்டுமே தீர்வு. இதற்காக தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றத்தில், சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். கீழ்பவானி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை. பொதுப்பணி துறையை, தங்கள் வசம் வைத்திருந்த முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், மற்றும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர், கீழ்பவானியில், விதிமுறை மீறல் எதுவும் நடக்கவில்லை என நிரூபித்தால் அவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்" என்று நேரடியாக சவால் விடுத்துள்ளார். நல்லசாமி விடுத்துள்ள இந்த சவால் அரசியல் களத்தில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. தாராபுரம் இடைத்தேர்தலை வெறும் தேர்தல் போட்டியாக மட்டும் பார்க்காமல், காவிரி நீர், கள் மீதான தடை, கீழ்பவானி அணை விவகாரம் என பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அரசியல் களமாக மாற்றும் முயற்சியாகவே இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி, ஓபிஎஸ், துரைமுருகன் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த ரூ.10 கோடி சவாலுக்கு அடுத்தகட்டமாக என்ன பதில் வரும் என்பதுதான் இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது...!!!எம்எல்ஏவுக்கு இனோவா கார்
எடப்பாடி பழனிசாமி - 10 கோடி ரூபாய் பரிசு
10 கோடி சவாலுக்கு பதில்?