தூங்குகிறாரா விஜய்?.. நாட்டுத் துப்பாக்கியால் பாமக நிர்வாகி கொலை.. எடப்பாடி சரமாரி கேள்வி

  • சென்னை: வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் நாட்டுத் துப்பாக்கியால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வடமாநிலங்களைப் போல தமிழகத்தில் துப்பாக்கி கலச்சாரம் பரவி வருவதாகவும், இதனை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி ஞானவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    Advertisement

    யாருக்கு என்ன லாபம்

    தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீரழிந்து, சாமானிய மக்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், தற்போது வட மாநிலங்களை போல துப்பாக்கி கலாச்சாரமும் பரவி வருவது தமிழக மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளது.

    குற்றங்கள் நடக்கும் போதெல்லாம், "உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறோம்", "கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்" என்று வெறும் பெயரளவு செய்திகளை மட்டும் ஊடகங்களில் பரப்புவதால் யாருக்கு என்ன லாபம்?

    தூங்குகிறாரா முதல்வர்

    வெறும் விளம்பர அறிக்கைகளாலும், கேமராக்களுக்கு முன்னால் நடத்தும் போலி ஆய்வுகளாலும் ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை ஒருபோதும் சரிசெய்து விட முடியாது. காவல் துறையை தன் கையில் வைத்துள்ள பொய்க்கால் குதிரை அரசின் முதலமைச்சர் விஜய் நிர்வாகத் திறமையின்றி தூங்கிக் கொண்டிருக்கிறாரா?.

    Advertisement

    துப்பாக்கி கலச்சாரம்

    எனவே, இனிமேலும் விளம்பர பாணியில் வெற்று நாடகங்களை நடத்தாமல், தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கும் சட்டம்-ஒழுங்கை உடனடியாக சரிசெய்யவும், துப்பாக்கி கலாச்சாரத்தை ஆரம்ப நிலையிலேயே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும் தேவையான தக்க நடவடிக்கைகளை பொய்க்கால் குதிரை தவெக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami has condemned the murder of PMK functionary Gnanavel in Gudiyatham and criticized the TVK government over the growing gun culture and law and order situation in Tamil Nadu.