கீழ்மாடியில் ராஜினாமா.. மேல்மாடியில் இணைப்பு.. மன்னன் விவகாரத்தில் தவெகவை வறுத்தெடுத்த எடப்பாடி

  • சென்னை: அதிமுக நிர்வாகி மன்னன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மன்னனை விடுதலை செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தவெக அரசுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் அவர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம்.

    Advertisement

    குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக.

    நாடுகாணாத கேவலம்

    ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, "தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?" என்று மக்களே அருவருக்கும் வகையில், "கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா" என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான்.

    இந்த உண்மைகள் குறித்தெல்லாம் பேச வக்கில்லாத இந்த அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, கழக நிர்வாகி மன்னன் அவர்களை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது.

    Advertisement

    சினிமா பார்முலா

    முதல்வரை அணுக முடியாமல், பல Powercenter-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி MLA-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. சொந்த கட்சி MLA-க்களை சமாதானப்படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை இந்த அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

    பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும்!.

    Advertisement

    எடப்பாடி வலியுறுத்தல்

    உடனடியாக மன்னன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    AIADMK General Secretary Edappadi Palaniswami has strongly condemned the TVK government over the arrest of party leader P.M. Mannan, alleging a false case and demanding his immediate release.