‘3+3’ பிளானுக்கு நோ சொன்ன எடப்பாடி பழனிசாமி.. 6 தொகுதிகளிலும் நேரடியாக களம் இறங்கும் அதிமுக!

  • சென்னை: 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 3ல் அதிமுகவும், 3ல் கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று நிர்வாகிகள் சொன்ன யோசனையை தவிர்த்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 6 தொகுதிகளில் 5ல் இரட்டை இலை வென்றிருப்பதால், அதிமுக நேரடியாக களமிறங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் வெல்வதன் மூலம் கட்சியை காப்பாற்ற முடியும் என்று எடப்பாடி நம்புகிறார்.

    Advertisement

    தமிழகத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்போதைய புதிய அரசியல் சூழலில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் தராமல், அனைத்திலும் அதிமுக நேரடியாகப் போட்டியிடும் என்ற அதிரடி முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

    Advertisement

    இடைத்தேர்தல் வியூகம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற அதிமுக உட்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு புதிய யோசனையை முன்வைத்தனர். அதன்படி, மொத்தமுள்ள 6 தொகுதிகளில், 3 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடலாம். மீதமுள்ள 3 தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகளான பாமக, அமமுக, பாஜகவுக்கு கொடுக்கலாம்.

    திமுக கூட்டணி கட்சிகள் இல்லாமல் தடுமாறும் சூழலில், இப்படி கொடுப்பதன் மூலமாக நம்மால் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பலன் அளிக்கும் என்று கூறியுள்ளனர். நிர்வாகிகளின் இந்த '3+3' யோசனையை எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார்.

    Advertisement

    தற்போதைய அரசியல் சூழலில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை விட்டுக் கொடுப்பது கட்சிக்குச் சாதகமாக இருக்காது என அவர் கருதுகிறார். ஏனென்றால் ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிமுகவில் இருந்து சாரை சாரையாக சென்று தவெகவில் இணைவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், இடைத்தேர்தலில் அதிமுக கட்டாயம் வெல்ல வேண்டும்.

    தற்போது இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 6 தொகுதிகளில், கடந்த பொதுத்தேர்தலில் 5 தொகுதிகளில் அதிமுகவின் 'இரட்டை இலை' சின்னமே வென்றிருந்தது. எனவே, 5 சிட்டிங் தொகுதிகள் உட்பட 6 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாகக் களம் காண வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். 2 தொகுதிகளில் வென்றால் கூட, தவெக நோக்கி செல்லலாம் என்ற முடிவில் இருக்கும் சிலர் பின்வாங்குவார்கள் என்று பார்க்கிறார்.

    Advertisement

    இதனால் அதிமுக சார்பாக 6 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் களம் அதிமுகவுக்கு வாழ்வா சாவா என்ற வகையில் இருப்பதால், நிச்சயமாக சில தொகுதிகளையாவது வெல்ல வேண்டும் என்பதில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குறியாக உள்ளனர்.

    English Summary

    Edappadi Palaniswami: Edappadi Palaniswami Rejects '3+3' Formula, Decides AIADMK Will Contest All 6 By-Election Seats Directly