சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!

  • சேலம்: தவெக ஆட்சிக்கு வந்த பின் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் பலரும் தவெகவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தவெக சார்பாக போட்டியிட அதிமுகவினர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அதிமுகவில் இருந்து தவெகவுக்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    Advertisement

    இப்படியான சூழலில் சேலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தவெக அரசு பெரும்பான்மை இடங்களில் வெற்றியை பெறவில்லை. 108 இடங்களில் தான் வெற்றி பெற்றுள்ளது. 8 மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட தவெகவினரால் வெல்ல முடியவில்லை. பல கட்சிகள் ஆதரவு கொடுத்துதான் விஜய் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்.

    Advertisement

    ஒரு நாற்காலிக்கு 4 கால்கள் இருக்கும். அதில் 2 கால்கள் தான் தற்போதைய ஆட்சியாளர்களின் கால். மீதி இரண்டு கால்கள் இரவல் கால்கள் தான். திமுக மூலமாக வெற்றி பெற்ற கூட்டணி கட்சிகள் இன்று தவெகவுக்கு ஆதரவு கொடுத்து தவெக ஆட்சி அமைத்துள்ளது. அந்த இரு கால்கள் நகர்கிற போது, நாற்காலி எப்போது வேண்டுமானாலும் தானாக சாயும். அப்படிபட்ட நிலைமை தான் தவெகவுக்கு இருக்கிறது.

    தேர்தல் நேரத்தில் இரு திராவிட கட்சிகளும் அகற்றப்பட வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கூறினார். ஆனால் தற்போது நிலைமை என்ன.. திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற கட்சிகள் தான் தவெக ஆட்சிக்கும் முட்டுக் கொடுத்து தாங்கி கொண்டிருக்கிறது. சிபிஎம், சிபிஐ, விசிக போன்ற சில கட்சிகளின் ஆதரவால் தான் தவெக ஆட்சி அமைத்துள்ளது. அவர்கள் தயவு எவ்வளவு நாட்கள் உள்ளதோ, அவ்வளவு நாட்கள் தான் விஜய் ஆட்சியில் இருப்பார்.

    Advertisement

    இதனை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். பீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுகவை உடைக்கவோ, முடக்கவோ முடியாது. இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி அதிமுக. அவர்கள் தெய்வங்களாக நின்று அசி வழங்கி கொண்டிருக்கின்றனர்.

    அதிமுகவை தப்பாக எடை போடாதீர்கள். திரையுலகில் இருந்து நீங்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள். நாங்கள் மக்களுடன் இருந்து சேவை செய்து ஆட்சியில் இருந்தோம். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதனை அதிமுக சொல்லவில்லை. தவெக ஆட்சி அமைக்க உதவி நிற்கும் கம்யூனிஸ்ட்கள் கூறுகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.

    English Summary

    Edappadi Palaniswami: Law and Order in Tatters, Even Left Parties Aligning with TVK Admit It": AIADMK Chief Slams Government