சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் மோசடி நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தர சுமார் 100 கோடி முதல் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரார் கடந்த அக்டோபர் 26ம் தேதி அன்பில் மகேஸை கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த சில மணி நேரங்களிலேயே கைது செய்யப்பட்டார்.
இப்போது அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் திமுக, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளது. மேலும், அன்பில் மகேஸ் ஜாமீன் கோரியும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதற்கிடையே திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்தும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீதான நடவடிக்கைகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் சட்டென பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. ஒன்று தவெகவிடம் கேட்க வேண்டும்.. அல்லது திமுகவிடம் கேட்க வேண்டும். இடையில் எங்ககிட்ட கேட்டா என்ன தெரியும்? எங்களுக்கு அதை பற்றி முழுமையாக தெரியாத காரணத்தினால், இதில் சரியான பதில் கூற முடியாது. நான் சொன்னால் தவறான பதிலாகிவிடும்! ஏனென்றால், ஒருவர் மீது ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார்கள் என்றால், அந்த வழக்கின் முழு விவரம் அவர்களுக்குத்தான் தெரிய வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்களுக்கு அது தெரியும். அந்த வழக்கை எதிர்கொள்வோருக்கு தான் முழுமையாக தெரியும். எனவே, அவர்களிடமே சென்று கேட்டு கொள்ளுங்கள்" என்றார். முன்னதாக தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிகழ்வு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "நேற்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து கொண்டிருந்தேன். அப்போது திடீரென மின்விளக்குகள் அணைந்துபோய் மின்வெட்டு ஏற்பட்டது. அதற்கும் அமைச்சர் நிர்மல் குமார் ஒரு காரணத்தைக் கற்பிக்கிறார். மீனாட்சி அம்மனே அவரை பார்த்துக் கொள்வார். கடவுளிடமே பொய் சொல்கிற ஆள் அவர் மட்டும்தான்! அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு தகுந்த தீர்வு காண வேண்டுமே தவிர, அதற்கு ஏதாவது ஒரு பதிலை மழுப்பலாக கண்டுபிடித்து சொல்வது தவறு. 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மிகக் கடுமையான மின்வெட்டு நிலவியது. அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 'மூன்றே ஆண்டுகளில் மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்' என்று தேர்தல் வாக்குறுதி அளித்து, தடையில்லா மின்சாரம் வழங்கி, உபரி மின்சாரத்தை அண்டை மாநிலங்களுக்கு தரும் அளவிற்கு மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். திட்டமிட்டு செயல்பட்ட அரசு அதிமுக அரசு; திட்டமிடாமல் செயல்படுகின்ற ஒரே அரசு தவெக அரசுதான்" என்று கடுமையாகச் சாடினார்.அன்பில் மகேஸ்
டெல்லியே யோசிக்கிற அளவிற்கு.. விஜிலென்ஸ் ஆக்சன் இருக்கணும்.. அன்பில், நேரு கேசில் விஜய் கறார்!
யோசிக்காமல் எடப்பாடி சொன்ன பதில்
அன்பில் மகேஷுக்கு இனி வீட்டில் சமைத்த உணவு தரலாம்! ஆனால் அதன் தரத்திற்கு மகேஷே பொறுப்பு! நீதிபதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
அடிக்கடி மின்வெட்டு