சென்னை: சென்னை அருகே இரண்டு கானா பாடகர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் விஜய் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அவர், "ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்த கானா பாடகர்கள் பரத்குமார் (வயது22), சீனிவாசன் (23). நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு படப்பை அருகே உள்ள அம்மணம்பாக்கம் பகுதியில் நண்பர் லோகேஷ் என்பவரது வீட்டில் தங்கியுள்ளனர். நேற்று காலை மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 6 பேர் கும்பல் திடீரென லோகேசின் வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் பரத்குமார், சீனிவாசன் ஆகிய 2 பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். அப்போது கொலையாளிகளை தடுக்க முயன்ற லோகேசின் தந்தை மோகனுக்கும் வெட்டு விழுந்தது. லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து படப்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ள நிலையில், அவர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் இதேபோல் இரட்டை கொலை நடந்தது. இந்த கொலைக்கும் தற்போது நடந்த கானாபாடகர்கள் கொலைக்கும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என விஜய் அரசை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னை முடிச்சூர், வரதராஜபுரத்தைச் சேர்ந்த பரத் மற்றும் சீனு என்ற கானா பாடகர்கள் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு படப்பையில், நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுபேர் கும்பல் இருவரையும் கொடூர ஆயுதங்களால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு இரண்டு இளைஞர்களை வெட்டிக் கொன்றுள்ள போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடித்து சட்டம் ஒழுங்கை காக்க வலியுறுத்துகிறேன்.கானா பாடகர்கள் படுகொலை
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பொய்க்கால் குதிரை அரசு