எடப்பாடி பழனிசாமிக்கு வந்த 6 ரகசிய தகவல்? ஜோலார்பேட்டை முதல் தொண்டாமுத்தூர் வரை மாறும் அரசியல் களம்

  • சென்னை: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதை சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது; அதேசமயம் அதிமுகவும் நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தனது பலத்தை சட்டப்பேரவையில் மேலும் அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்காக, எதிர்க்கட்சியான அதிமுகவிலுள்ள முக்கியப் புள்ளிகளைத் தன்பக்கம் ஈர்க்கும் முயற்சியில் தவெக தீவிரமாக இறங்கியுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி திமுகவை பிரதான எதிரியாகக் கருதி களம் இறங்கிய விஜய்க்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை கைப்பற்றி தந்தது ஒரு பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.

    Advertisement

    அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட தவெக, ஆட்சியில் இல்லாத கடந்த 5 ஆண்டுகளில் நிதி நெருக்கடியைச் சந்தித்துத் தொண்டர்களை தக்கவைக்கப் போராடிய அதிமுகவின் முதுகெலும்பை உடைக்க இப்போது வலையை விரித்துள்ளது. மரகதம் குமரவேல், சத்யபாமா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தவெக பக்கம் சாய்ந்த நிலையில், இன்னும் சிலரையும் வளைக்கத் தவெக திட்டமிட்டுள்ளது.

    தவெக ஆட்சி - கலங்கும் அதிமுக மேலிடம்

    ஆட்சியில் இருப்பவர்களுடன் இணக்கமாக இருந்தால்தான் தொகுதிக்கு தேவையான திட்டங்களைக் கொண்டுவர முடியும் என்ற யதார்த்தத்தை அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்துவிட்டனர்.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தனது இருப்பை தக்கவைக்கப் போராடினாலும், அடிமட்டத் தொண்டர்களும் மாவட்ட பொறுப்பாளர்களும் தவெக பக்கம் ஈர்க்கப்படுவது அதிமுகவின் பிடிமானத்தை தளர்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, அதிமுகவில் மூத்த தலைவர்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதும், இளைஞர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்காததும் அந்தத் தொண்டர்களை தவெகவின் பக்கம் தள்ளியிருக்கிறது.

    ஏற்கனவே எம்எல்ஏக்கள் பலரின் விலகல் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை தந்துள்ள நிலையில், இப்போது மேலும் சில புள்ளிகள் தவெகவில் இணையத் துடிப்பதாக செய்திகள் கசிகின்றன.

    எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்

    ஒருபுறம் வேலுமணி, வீரமணி, அன்பழகன் போன்ற முக்கிய தளபதிகள் தவெக பக்கம் சாய்வது, மறுபுறம் "தகுதி நீக்கம்" என்ற ஆயுதம் பலன் அளிக்காதது என எடப்பாடி பழனிசாமி கடும் சவால்களைச் சந்தித்து வருகிறார். கட்சிப் பொறுப்பாளர்களும் முன்னாள் அமைச்சர்களும் அடுத்த 5 ஆண்டுகளை பதவியுடன் கழிக்க விரும்பி தவெக பக்கம் தாவத் துடிக்கும்போது, அவர்களுக்கு பதிலாக புதிய இளம் ரத்தத்தை பாய்ச்ச வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

    Advertisement

    இதில் தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் போன்றவர்கள் ஒற்றுமைக்காகத் தியாகம் செய்யும் அளவிற்குச் சூழல் மாறியிருந்தாலும், ஒட்டுமொத்த கட்சியை ஒன்றிணைக்க எடப்பாடி எடுக்கும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.

    ஆதவ் அர்ஜூனா

    "அதிமுகதான் தவெகவின் தாய்க் கழகம்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விடுக்கும் அழைப்பு, அந்த பெரிய கட்சியை உள்ளிருந்தே சிதைக்கும் ஒரு அரசியல் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.

    சோதனையான காலத்தில் கைக்காசை போட்டு செலவு செய்த முன்னாள் அமைச்சர்கள் பலரும், இனி வரும் காலங்களில் அதிகாரமில்லாமல் இருக்கத் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் முதல் பதவிகள் வரை சலுகைகளைத் தவெக தரப்பு காட்டும் போது, அது ஒரு கட்டத்தில் "அதிமுக - தவெக"' இணைப்பு என்ற நிலையை எட்டிவிடும் அபாயம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கிறார்கள்.

    Advertisement

    தவெக - திமுக

    இருந்தாலும், 2026 தேர்தலில் சுமார் 1 கோடியே 4 லட்சம் வாக்குகளைப் பெற்ற அதிமுகவை அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.. அந்தக் கட்சிக்கு இன்னும் அடிமட்டத்தில் வலுவான ஆதரவு உள்ளது. ஆனால் தவெகவின் இந்த "இழுக்கும்" அரசியல் தொடர்ந்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறுவதுடன், அடுத்த சில வருடங்களில் தமிழக அரசியல் "தவெக Vs திமுக" என்ற நேர்க்கோட்டில் பயணிக்கக்கூடும்.

    வரும் இடைத்தேர்தல்களில் எப்படியாவது சட்டப்பேரவையில் தனி மெஜாரிட்டியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்கிறார். இதற்காக அதிமுகவின் கோட்டைகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி, அங்குள்ள முக்கிய தலைவர்களைத் தனது கட்சிக்குள் கொண்டு வரும் வேலையைத் தவெக மிகத் தீவிரமாகச் செய்து வருகிறது.

    Advertisement

    6 பேர் ரெடி

    அந்தவகையில், கே. சி. வீரமணி, பாலகிருஷ்ண ரெட்டி , கே. பி. அன்பழகன், சி. வி. சண்முகம், எஸ். பி. வேலுமணி, எஸ். எம். சுகுமார் போன்ற முக்கிய புள்ளிகள். தவெகவில் இணையத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. .

    ஒருவேளை இது சாத்தியமானால், சட்டப்பேரவையில் யாருடைய கூட்டணியையும் நம்பியிருக்கத் தேவையில்லை என்ற வலுவான நிலையை விஜய் அடைந்துவிடுவார். இப்படிப்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு நடுவில், எடப்பாடி பழனிசாமி என்ன மாதிரியான வியூகங்களை வகுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English Summary

    Edappadi Palaniswami Received 6 Secret Information? Political Scene Shifts from Jolarpettai to Thondamuthur