சட்டசபையில் நடக்கும் காட்சிகள்.. அப்செட்டில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம்.. காலை வாரிய தவெக!

  • சென்னை: அதிமுக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பலரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் நகர்ந்து வருவது எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோரை அப்செட்டில் ஆழ்த்தி இருக்கிறது. சட்டசபையில் அதிமுக அதிருப்தி அணியை உருவாக்க இருவரும் முயற்சித்த நிலையில், அவர்களுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேச கூட அனுமதி அளிக்காதது அவர்களுக்கு பின்னடைவாகவும் மாறி இருக்கிறது.

    Advertisement

    சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக 25 எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். அடுத்த ஒரு மாதத்தில் அவர்களில் 6 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாக தவெகவில் ஐக்கியமாகினர். சி விஜயபாஸ்கர், எம்ஆர் விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    அந்த நேரத்தில் இன்னும் பலரும் அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. குறிப்பாக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோருடன் தவெக பேசி வந்ததாக முனுமுனுக்கப்பட்டது. அதற்கேற்ப அவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினர். ஆனால் அடுத்த 10 நாட்களில் எடப்பாடி பழனிசாமி அணியில் ஐக்கியமாகினர்.

    இதன்பின் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளிக்காததால், மீண்டும் போர்க்கொடி தூக்கினர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுநாள் வரை அவர்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமல்லாமல் அதிருப்தி அணியில் இருக்கும் பலரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் நிலைப்பாட்டை மாற்றி வருகின்றனர்.

    Advertisement

    அண்மையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சேலத்தில் அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அதேபோல் கேபி அன்பழகன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசாமல் அமைதி காத்து வந்தனர். இதனிடையே சட்டசபையில் அதிமுக அதிருப்தி அணியை உருவாக்கும் முயற்சியிலும் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு ஈடுபட்டதாக பேசப்பட்டது.

    அதற்கேற்ப பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் சபாநாயகர் அறைக்கு சென்று இவர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது அமைச்சர் செங்கோட்டையனும் உடனிருந்தார். அப்போது அதிருப்தி அணியான தங்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இது தவெகவுக்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

    Advertisement

    ஆனால் சட்டசபையில் எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் ஆகிய இருவருக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுவதற்கே பெரிதாக அனுமதிக்க அளிப்பதில்லை. கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது இவர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுவதால், அப்செட்டில் இருக்கின்றனர். அதேபோல் அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நகர்வதற்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

    English Summary

    Edappadi Palaniswami: Setback for Velumani and CV Shanmugam as AIADMK Dissidents Shift Loyalty to Edappadi Palaniswami