டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள் விலை 10 ரூபாய் உயர்வு.. நவம்பர் 1 முதல் குடிமகன்களுக்கு 2 ட்விஸ்ட்டுகள்

  • சென்னை: தமிழகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் மதுபாட்டில்கள் விலை ரூ.10 உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மதுபானங்கள் விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பீர், ஒயின், வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுபானங்கள் என அனைத்து வகை மதுபானங்களுக்கும் விலை உயர்வு பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது

    Advertisement

    இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர், மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு உத்தரவின் படி, மனித நுகர்வுக்கான மதுபானங்கள் விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்கள், பீர், ஒயின், பிற மாநில மதுபானங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையும் நவம்பர் 1-ந்தேதி முதல், அனைத்து அளவிலான பாட்டில்களுக்கும் ரூ.10 உயர்த்தப்படுகிறது.

    Advertisement

    இந்தக் கட்டண விதிப்பால் டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலையுடன், எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும் திருத்தப்படுகிறது. டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து எப்.எல்.2 உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும், சில்லறை விற்பனைக் கடைகளின் விலைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது.

    மதுபான உற்பத்தியாளர்கள், திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அனைத்து வரிகளும், ரூ.10 கட்டணமும் அடங்கிய விலை எனக் குறிப்பிட்டு, பாட்டில்களின் விலைச்சீட்டுகளில் அச்சிட வேண்டும்.

    உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் மொத்த விற்பனைக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபாட்டில்களிலும் திருத்தப்பட்ட விலைச்சீட்டுகளை ஒட்ட வேண்டும். நவம்பர் 1-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் அனைத்து மதுபானங்களிலும் திருத்தப்பட்ட விலைச்சீட்டுகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இதனை அனைத்து உற்பத்தியாளர்களும் வினியோகஸ்தர்களும் உறுதிசெய்து, உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Advertisement

    முன்னதாக டாஸ்மாக்கில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "தமிழ்நாடு முழுவதும் 4,048 டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் மதுபானங்கள் விற்பனைச் செய்யப்படும்போது விற்பனைத் தொகையாக ரொக்கம், யுபிஐ மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ஆகிய முறைகளில் பெறப்பட்டு வருகின்றபோதிலும் விற்பனைத் தொகையின் பெரும் பகுதி ரொக்கமாகவே பெறப்பட்டு வருகிறது.

    நாள்தோறும் பெறப்படும் பெருந்தொகையைக் கடையில் பாதுகாப்பாக வைத்திருப்பதில் கடைப் பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ரொக்கத்தை வங்கியில் செலுத்துவதற்காகப் பணியாளர்கள் நாள்தோறும் பயணிக்க வேண்டியிருப்பதால், அவர்களின் பணிச்சுமையும் இடர்பாடும் அதிகரிக்கின்றன. ரொக்கப் பரிவர்த்தனையில் கள்ளநோட்டுகள், பணப்பற்றாக்குறை மற்றும் கணக்கு வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு (MRP) மேல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்படுகின்றன. ரொக்கப் பரிவர்த்தனையில் செலுத்தப்பட்ட தொகைக்குச் சான்று இல்லாததால், இத்தகைய புகார்களைத் தடுப்பதும் விசாரணை மேற்கொள்வதும் கடினமாக உள்ளது.

    Advertisement

    டிஜிட்டல் முறையில் விற்பனைத் தொகை பெறப்படும்போது ஒவ்வொரு பரிவர்த்தனையின் தொகையும், நேரமும் பதிவாகுவதால், MRP-க்கு மேல் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படுவதுடன், விற்பனைத் தொகை நேரடியாகக் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் கடையில் ரொக்கம் வைத்திருத்தல், இரவு நேரத்தில் ரொக்கத்துடன் பயணித்தல், வங்கியில் ரொக்கம் செலுத்துதல் ஆகிய இடர்பாடுகள் பெருமளவு குறைவதுடன், விற்பனையில் வெளிப்படைத்தன்மையும், பணியாளர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

    மேற்கண்ட நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆக.07- ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மதுபான முன்பதிவு முறை அனுமதிக்கப்பட்டு, நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை அருகிலுள்ள கடைகளைத் தேர்வு செய்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அதற்கான தொகையினைச் செலுத்தி அக்கடைக்கு நேரில் சென்று மதுபானங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து, அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், தற்போது, ரொக்கமில்லா டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நவ.01- ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் ஒரு விற்பனையில் ரூபாய் 1,000- க்கு மேற்பட்ட மதிப்புள்ள மதுபானங்களை வாங்கும்போது, யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 2027 ஜன.01 முதல் ஒரு விற்பனையில் ரூபாய் 500- க்கு மேற்பட்ட மதிப்புள்ள மதுபானங்களை வாங்கும்போது, யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இந்நடைமுறையைச் செம்மையாகச் செயல்படுத்த அனைத்து மாவட்ட மேலாளர்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    Advertisement

    தங்கள் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு சில்லறை விற்பனைக் கடையிலும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட செயல்படும் நிலையிலுள்ள POS இயந்திரமும் நவ.01- க்கு முன்னரே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைபாடு உள்ள இயந்திரங்களைச் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பணியாளருடன் தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும் அல்லது மாற்று இயந்திரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட POS இயந்திரத்தின் மூலமாக மட்டுமே மேற்கண்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விதிமுறைகளுக்கு மாறாகச் செயல்படுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இச்சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும், அந்தந்த கடைப் பணியாளர்களுக்கும் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகளுக்கும் உடனடியாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்குறிப்பிட்ட நடைமுறையினை நவ.01 முதல் தவறாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பு தொடர்பாக டாஸ்மாக் கடைகள் முன்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    English Summary

    The TASMAC administration has announced that the prices of liquor bottles in Tamil Nadu will be increased by Rs. 10, effective from November 1st. This price hike is due to the imposition of an 'environmental and social welfare fee' of Rs. 10 per bottle on the sale of liquor.