சென்னை: பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள "எல் நினோ" கடல் வெப்பநிலை மாற்றம், வரும் 2027-ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்க 98% வாய்ப்புகள் உள்ளதாக INCOIS எனப்படும் இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரித்துள்ளது. இந்த எல் நினோ கடந்த ஜூன் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இது இன்னும் தீவிரமடையும் என்று உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. இதனால் நடப்பு தென்மேற்கு பருவமழை, இனி வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை, குளிர்காலம் என 3 பருவங்களிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எல் நினோ தாக்கத்தால், அடுத்த சில வாரங்களில் சென்னை மற்றும் தமிழகத்தில் வெப்பமும் புழுக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு தீவிரமடையாததால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகமான வெப்ப அலையும், சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான புழுக்கமும் நீடிக்கிறது. அரபிக்கடலிலிருந்து வரும் ஈரப்பத காற்றை இந்த எல் நினோ தடுத்து வறண்ட சூழலை உருவாக்குவதே இதற்கு முக்கியமான காரணமாகும்.. சென்னையில் மழை ஓய்ந்ததுமே, அடுத்த மழை பெய்யும் வரை வெயிலின் தாக்கம் மறுபடியும் அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு விடுத்துள்ள புதிய எச்சரிக்கையின்படி, இந்த 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 27 மாநிலங்களைச் சேர்ந்த 226 மாவட்டங்களில் பருவமழை குறைந்து கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் நீலகிரி ஆகிய 12 மாவட்டங்கள் வறட்சியால் நேரடியாகப் பாதிக்கப்படலாம் என மத்திய அரசு அடையாளப்படுத்தியுள்ளது. இந்த நீடித்த வெப்பமும் வறட்சியும் தமிழகத்தின் விவசாயத்தை கடுமையாக அச்சுறுத்தத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் ஜூன் மாத தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்து, மேட்டூர் அணை திறப்பில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது; இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்படுவதோடு, அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து சந்தையில் அவற்றின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வரலாற்று தரவுகளின்படி, 1987-க்குப் பிறகு வந்த 9 எல் நினோ ஆண்டுகளில், 8 ஆண்டுகளில் சென்னையில் தென்மேற்கு பருவமழை பொய்த்துப் போயுள்ளது. சென்னைக்கு கிடைக்க வேண்டிய சராசரி 44 சென்டிமீட்டர் மழை இந்த காலங்களில் கிடைக்கவில்லை. ஆனால் தென்மேற்கு பருவமழையைப் பலவீனப்படுத்தினாலும், எல் நினோ காலங்கள் சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு பருவமழைக்கு அதாவது அக்டோபர் முதல் டிசம்பர்வரை சாதகமாக அமையும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்கிறார்.. சென்னையை பொறுத்தவரை, 60% ஆண்டு மழைத்தேவை வடகிழக்கு பருவமழை மூலமே பூர்த்தியாகிறது. தமிழகத்தில் அதிக அளவில் வடகிழக்கு பருவமழை பதிவான 1997, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகள் மிக வலுவான எல் நினோ ஆண்டுகளேயாகும். இருந்தாலும், மழையின் ஒட்டுமொத்த அளவு எல் நினோவை மட்டுமே சார்ந்திருக்காமல், வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னங்களைப் பொறுத்தே இறுதியாக அமையும். இந்த காலநிலை மாற்றத்தால் கடலோரப் பகுதிகளில் மீன்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் மாறுபடும் என்பதால், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம். அதனால் எல் நினோ தாக்கம் எப்படி மாறுகிறது என்பது அடுத்த சில வாரங்களில் தெளிவாகும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்தள்ளார்கள்.எல் நினோ - வறண்ட சூழல்
தமிழகத்தில் 12 மாவட்டங்கள்தென்மேற்கு பருவமழை