சென்னை: மின் வாரியத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் கார்ப்பரேட் ஆதரவு நிலைப்பாட்டை தவெக அரசு எடுத்துள்ளதாக மின் ஊழியர் மத்திய அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் தற்போதுள்ள 5x210 மெகாவாட் மின் நிலையத்தை மாற்றிவிட்டு, அங்கு 2x800 மெகாவாட் மின்திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தை ரூ.20,800 கோடி முதலீட்டில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் (PPP) துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மின்சார வாரியம் தனியார்மயம் ஆவதை நோக்கி வேகமாகச் செல்கிறது என்பதை உணர்த்துவதாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெயசங்கர் கூறியுள்ளார். இதேபோல் எண்ணூர் அனல்மின் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முதலமைச்சரின் அறிவிப்புக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாரிடம் வழங்கும் தவெக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின் வாரியத்தில் 10,000 பேரை 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே எடுப்பதா எனக் கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் தி.ஜெயசங்கர், புதிய புனல் மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களையும் தனியாருக்கு விற்கும் தவெக அரசின் நிர்வாக திறமையின்மை அம்பலமாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.