கேரளாவிற்கு ரூ.8.64, 12.50, ₹14.50 விலையில் மின்சாரம்.. தமிழக அரசு பதில் அளிக்க வேண்டிய 10 கேள்விகள்?

  • சென்னை: கேரளாவிற்கு ரூ.8.645, ரூ.12.50, ரூ.14.50 ஆகிய விலைகளில் ஒரு யூனிட் மின்சாரம் கிடைக்கும் போது தமிழ்நாட்டின் ரூ.35-ரூ.37 ரூபாய்க்கு வாங்க முயன்றது ஏன் என்ற கேள்விகளை பலரும் முன் வைக்கிறார்கள் . மின்சார டெண்டர் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டிய 10 கேள்விகளை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.

    Advertisement

    முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "கேரளத்தைப் பற்றிய ஒரு செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.

    Advertisement

    அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?

    இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Advertisement

    இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய கேள்விகளை பார்ப்போம்.

    1. மின்தேவை ஜூலை மாதத்திலேயே அதிகரிக்கும் என்று மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்து இருந்திருக்கிறது. ஆனால் அக்டோபர் 6-ம் தேதி வரை ஏன் தமிழ்நாடு அரசின் மின்வாரியம் காத்திருந்தது.

    2. அக்டோபர் 12 முதல் அக்டோபர் 31 வரை மின்சாரம் தேவைப்பட்ட நிலையில், அதற்கு ஆறு நாட்களுக்கு முன்புதான் டெண்டர் வெளியிட வேண்டிய அவசியம் எதனால் வந்தது. ஏன் முன்கூடடிய டெண்டர்விடவில்லை

    3. ஆந்திர அரசு செப்டம்பர் 9-ம் தேதியே அக்டோபர் மாதத்துக்கான மின்சாரத்தை யூனிட் ₹16 முதல் ₹20 வரை வாங்க ஒப்பந்தம் செய்தாக தகவல்கள் வந்துள்ளது.ஆனால் ஆந்திரப் பிரதேசத்தால் குறைந்த விலைக்கு வாங்க முடிந்த போது, தமிழ்நாட்டால் ஏன் அதேபோன்ற முன்கூட்டிய ஏற்பாட்டைச் செய்ய முடியாமல் போனது

    Advertisement
    141 வீடுகளுக்கு சோலார் மின்சாரம்! மத்திய அரசு மானியம், நிறுவனங்களின் நிதியுதவி தரும் சூப்பர் திட்டம்

    4. அதேபோல் ஜூன் மாதங்களில இருந்தே மின்சாரம் பல இடங்களில் அடிக்கடி கட்டாகி வந்தது. இப்படியான சூழலில் அக்டோபரில் மின்சாரப் பற்றாக்குறை திடீரென ஏற்பட்டதா? அல்லது திட்டமிடலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அவசரக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதா, என்ன காரணத்திற்காக ₹35-₹37 கொடுத்து வாங்க வேண்டிய நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டது.

    5. கேரளாவுக்கு ஒரு தனியார் நிறுவனம் 500 மெகாவாட் மின்சாரத்தை யூனிட் ₹8.645 விலையில் 24 மணி நேரமும் வழங்க முன்வந்ததாகச் செய்தி இன்று வந்துள்ளது. இதுபோன்ற நிறுவனங்களிடம் தமிழ்நாடு ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தவில்லையா.. கேரளாவின் ₹8.645 மின்சார முன்மொழிவைத் தமிழ்நாடு பரிசீலிக்கவில்லையா?

    Advertisement

    6. மிக முக்கியமான கேள்வி இதுதான்.. அரசு மின்சார தேவைக்கு குறுகிய கால ஒப்பந்தங்களை நம்பியிருப்பதற்குப் பதிலாக, எதிர்கால மின்தேவையைக் கணித்து மின்சார உற்பத்தி நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தங்களை முன்கூட்டியே செய்யாதது ஏன்?

    7. காற்றாலை மின்சார உற்பத்தி என்பது எல்லா மாதமும் ஒரே மாதிரி இருக்காது என்பது அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். இது பருவ நிலை மாறுபாடு தான்.. எனவே அதனை நம்பாமல் மாற்று மின்சார ஏற்பாடுகள் ஏன் முன்கூட்டியே செய்யாதது ஏன். காற்றாலை மின்சாரம் குறையப்போவதை முன்கூட்டியே கணிக்காதது ஏன்

    8. என்எல்சி உள்ளிட்ட மத்திய மின் தொகுப்பில் இருந்து போதிய மின்சாரம் திடீரென கிடைக்காமல் போகும் போது, அந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க முன்கூட்டியே அரசு கைவசம் வைத்திருந்த திட்டம் என்ன?

    Advertisement

    9. இறுதியாக ₹35, ₹37, ₹41.50 என விலை குறிப்பிட்ட நிறுவனங்கள் எது? அவற்றின் ஏல விவரங்கள், ஒப்பீட்டு அறிக்கைகள், ஒப்பந்த நிபந்தனைகள் பொதுமக்களுக்கு அரசு வெளியிடுமா? (இப்போது அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளது)

    10. ஜூலை மாதத்தில் அதிகாரிகள் அளித்த எச்சரிக்கைகள், மின்வாரியக் கூட்டக் குறிப்புகள், அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் ஆகியவற்றை அரசு வெளியிட தயாராக உள்ளதா? இப்போது எடுத்த முடிவுகளை அரசு வெளிப்படையாக விசாரிக்குமா? இந்த 10 கேள்விகளுக்கு அரசு பதில் அளித்தால், மின்சார கொள்முதல் விவகாரத்திற்கு விடை கிடைக்கும்.

    English Summary

    Many are asking why Tamil Nadu attempted to procure electricity at a cost of ₹35–₹37 per unit, when Kerala is able to source it at rates of ₹8.645, ₹12.50, and ₹14.50 per unit. In this post, we will look at 10 questions to which the Tamil Nadu government needs to provide an answer.