சென்னை: "மின் கட்டண உயர்வு சம்பந்தமாக 3.70 லட்சம் புகார்கள் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். அவர் வாட்ஸ்அப்பில் வந்த தவறான தகவலை நம்பி இவ்வாறு கூறியுள்ளார்" என மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
வழக்கத்துக்கு மாறாக மிக அதிக மின்சார கட்டண பில் வந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "3.7 லட்சம் புகார் வந்திருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வாட்ஸ் அப்பில் வந்த ஏதோவொரு தவறான தகவலைத்தான் அவர் சொல்லி இருக்கிறார். பலருக்கும் மின் கட்டணம் அதிகம் வந்திருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில் இது தொடர்பாக வழக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுடன் இந்தாண்டு ஒப்பிடுகையில், கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் 11.50 லட்சம் பேருக்கு 3 மடங்கு அளவில் மின் கட்டணம் வந்தது. ஆனால், இந்தாண்டில் 9.60 லட்சம் பேருக்குத்தான் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் 2 லட்சம் பேர் குறைந்துள்ளனர். மக்களைக் குழப்புவதற்காகவே மு.க. ஸ்டாலின் பிரச்சனை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதுபோல 3.70 லட்சம் புகார்கள் எல்லாம் வரவில்லை. மக்களைக் குழப்பும் வகையில் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், யூடியூபர் விஜே சித்துவின் மின்சாரக் கட்டணம் தொடர்பான வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, "தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான். முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை. 3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு இருக்கக் கூடும் என்பது உறுதியாகிறது. இந்தக் குளறுபடிகள் ஆய்வு செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் வரை, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் reading சரியான முறையில் மேற்கொள்ளப்படுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.