சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றமாக 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாய இடமாறுதல் செய்ய திட்டமிட்ப்பட்டுள்ளது. இனி கூகுள் மீட் கிடையாது எனவும், EMIS தளம் மூலமே மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளது. EMIS தளத்தில் ஊழியர்கள் விவரங்கள் விடுபட்டதால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கள நிலவரமும் EMIS விவரங்களும் முரண்படுவதால் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். மேலும், செப்டம்பர் 25-க்குள் பணிகளை முடிக்க போர்க்காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் திணறி வருகின்றனர்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் ஆஃப்லைனில் மாணவர்கள் கல்வி விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது டிஜிட்டல் யுகம் என்பதால் மாணவர்களின் விவரங்கள் பெற்றோர்களின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி கல்வித்துறை எமிஸ் எனும் இணையதளத்தையும் பராமரித்து வருகிறது. இந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் மட்டுமல்லாது பெற்றோர்களின் விவரங்கள், கல்வித் தகுதி, அரசின் நலத்திட்டங்கள், வருகை பதிவேடு உள்ளிட்டவையும் உடனுக்குடன் குறுஞ்செய்தியாக பெற்றோர்களுக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஆசிரியர்களின் வருகை, பணியிட மாறுதல் உள்ளிட்டவையும் இனி எமிஸ் முலமே இருக்குமாம். அதுமட்டுமல்லாம், ஒரே அலுவலகத்தில் அல்லது ஒரே பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளர்களுக்குக் கட்டாய இடமாறுதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுவரை கூகுள் மீட் வழியாக நடத்தப்பட்டு வந்த இந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள், இனி முழுமையாக EMIS இணையதளம் மூலமாகவே வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த உத்தரவு கல்வித்துறை அலுவலக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. களத்தில் தற்போது பணியாற்றி வரும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், EMIS தளத்தில் ஏற்கனவே பதிவாகியுள்ள விவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் குளறுபடிகளும் இடைவெளிகளும் இருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதனால் நேர்முக உதவியாளர் முதல் கடைநிலை இரவுக்காவலர் வரையிலான விவரங்களைச் சரிபார்த்து, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் முழுமையாக ஒத்திசைவு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் போர்க்காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி முடிவில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைப் பார்க்கும்போது, வெறும் நான்கைந்து நாட்களுக்குள் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் சேவைப் பதிவேடுகளைச் சரிபார்த்துப் பதிவேற்றுவது அதிகாரிகளுக்குக் கடும் பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறினாலோ அல்லது அவசர கதியிலோ ஒரு தகுதியான ஊழியரின் விவரம் விடுபட்டால், அவருடைய பணி மூப்பு மற்றும் நியாயமான பதவி உயர்வு பறிபோகும் மிகப்பெரிய ஆபத்தும் இதில் ஒளிந்துள்ளது. அதேநேரத்தில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் முகாமிட்டிருக்கும் ஊழியர்களை மாற்றி நிர்வாகத்தில் புதிய வேகத்தைக் கொண்டுவரவும், மாறுதல் கலந்தாய்வுகளில் அரசியல் மற்றும் தனிநபர் சிபாரிசுகளை ஒழித்துக் கணினி வழி தகுதியை உறுதிப்படுத்தவும் இது ஒரு நல்ல சீர்திருத்தமாகப் பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், கீழ்மட்ட ஊழியர்களையும் பெண்களையும் தூரத்து இடங்களுக்குக் கட்டாய மாறுதல் செய்யும் சூழல் வந்தால் அது குடும்ப அளவில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் என்ற அச்சமும் வலுத்துள்ளது. அரசு அறிவித்த இந்த மிகக் குறுகிய காலக்கெடுவுக்குள் அனைத்து முரண்பாடுகளும் களையப்பட்டு பட்டியல் முழுமை பெறுமா, அல்லது EMIS குளறுபடிகளால் கலந்தாய்வு சர்ச்சையில் முடியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள்.பள்ளிக்கல்வித்துறை
EMIS இணையதளம்
குளறுபடி
நடைமுறைச் சிக்கல்
கட்டாய இடமாறுதல்
கலந்தாய்வு சர்ச்சை