பாஜகவின் டிஜிட்டல் தளபதி அமித் மால்வியா அதிரடி நீக்கம்.. 10 ஆண்டு கால மாஸ்டர்மைண்ட் கேம் ஓவர்! ஏன்?

  • சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வியூகங்களிலும் அரசியல் பிரச்சாரங்களிலும் கடந்த பத்தாண்டுகளாக மிக முக்கிய ஆயுதமாக விளங்கியவர் அதன் தேசிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா.

    Advertisement

    பாஜகவின் சமூக ஊடகப் படையை வழிநடத்தி, எதிர்த்தரப்புக்குத் தலைவலியை உருவாக்கிய மால்வியா, தற்போது அப்பொறுப்பில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் புதிய தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிதின் நபீன் அமித் மால்வியாவுக்குப் பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கேவை புதிய ஐடி விங் தலைவராக நியமித்துள்ளார்.

    Advertisement

    பாஜக ஐடி விங்கின் முகமாகத் திகழ்ந்த மால்வியா

    வங்கிப் பணியில் இருந்து விலகி, 2009-ல் பாஜக ஆதரவு அமைப்புகள் மூலம் அரசியலுக்குள் நுழைந்தவர் அமித் மால்வியா. 2015-ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய ஐடி பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். 2014 முதல் பாஜக அடைந்த அபார வளர்ச்சிக்கு அதன் சமூக வலைத்தள பிரச்சாரங்கள் முக்கியப் பங்காற்றின. அந்த டிஜிட்டல் போர்க்களத்தின் தளபதியாக உருவெடுத்த மால்வியா, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவை இந்தியாவின் மிக பலம் வாய்ந்த அரசியல் இயந்திரமாக மாற்றினார்.

    கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, எதிர்க்கட்சிகளின் தலைவர்களைக் குறிவைத்து டிஜிட்டல் ட்ரோல்களை மற்றும் பிரச்சாரங்களை முன்னெடுப்பது, விவாதங்களின் போக்கைத் திசைதிருப்புவது என பாஜகவின் 'நரேட்டிவ் பில்டிங்' அத்தனையிலும் அமித் மால்வியாவின் பங்களிப்பே பிரதானமாக இருந்தது.

    Advertisement

    அதிரடி மாற்றத்திற்குப் பின்னணி என்ன?

    பாஜகவின் டிஜிட்டல் முகமாக மால்வியா வலம் வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட போலிச் செய்திப் புகார்கள், சர்ச்சைக்குரிய ட்வீட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் ஒருபுறம் அமைந்தன.

    மறுபுறம், அண்மைக்கால தேர்தல் களங்களில் எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் முன்னெடுத்த தீவிரமான மக்கள் நலப் பிரச்சாரங்களுக்கு இணையான தாக்கத்தை பாஜக ஐடி விங் ஏற்படுத்தத் தவறியதாகக் கட்சிக்குள் அதிருப்தி நிலவியது.

    முக்கியமாக நீட் எதிர்ப்பு ஜென் ஜி போராட்டத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது. பாஜக ஆன்லைன் டீம் பெரிதாக சோபிக்கவில்லை. பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமான இணையம் அதே பாஜகவின் வீழ்ச்சிக்கும் டெல்லியில் காரணமாக அமைந்தது. குறிப்பாக, வெறும் ஆக்ரோஷமான எதிர்வினைகளை மட்டுமே நம்பியிராமல், அடிமட்டப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு டிஜிட்டல் உத்திகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது. இந்த சூழலில், பாஜக தலைமை இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

    Advertisement

    யார் இந்த தீபக் மஸ்கே?**

    அமித் மால்வியாவின் இடத்தைப் பிடித்துள்ள தீபக் மஸ்கே, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆவார். கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சமூக ஊடகப் பிரிவில் தீவிரமாக இயங்கி வருபவர்.

    ஊடக வெளிச்சத்திற்கு வராமல் பின்னணியில் நின்று தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லவரான இவர், பீகார், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் சமூக ஊடகப் பிரச்சாரங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த அனுபவம் கொண்டவர். தீவிர களப்பணி மற்றும் தொழில்நுட்ப அனுபவம் கொண்ட முதல் தலைமுறை அரசியல்வாதியான தீபக் மஸ்கே மீது கட்சித் தலைமை பெரும் நம்பிக்கை வைத்துள்ளது.

    Advertisement

    புதிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 2027 இலக்கு

    ஐடி விங் தலைவரை மாற்றியதுடன் மட்டுமல்லாமல், சமூக ஊடகப் பிரிவிலும் விரிவான மறுசீரமைப்பை பாஜக மேற்கொண்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரீத்தி காந்தி, தில்லியைச் சேர்ந்த சிவானந்த் துவிவேதி, உத்தரகாண்டின் அலோக் பட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அருண் யாதவ் ஆகியோர் புதிய மாநில சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    2027-ல் உத்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, சமூக வலைத்தளங்களில் பாஜகவின் பிம்பத்தை மேலும் நம்பகத்தன்மையுடனும் ஆக்கப்பூர்வமாகவும் கட்டமைக்க புதிய தலைமை திட்டமிட்டுள்ளது. அமித் மால்வியாவின் விலகல் என்பது ஒரு தனிநபர் மாற்றம் மட்டுமல்லாமல், பாஜகவின் டிஜிட்டல் அரசியல் அணுகுமுறையிலேயே ஏற்பட்டுள்ள புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

    English Summary

    BJP Big Reshuffle: Smriti Irani & Ram Madhav Return as Nitin Nabin Announces New Team