ரியல் எஸ்டேட் ஷாக்.. பள்ளிக்கரணையில் பிரமாண்டமான பிரிகேட் நிறுவன குடியிருப்புக்கு அனுமதி ரத்து!

  • சென்னை: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் கட்டப்பட்டு வந்த பிரிகேட் நிறுவனத்தின் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுச்சூழல் அனுமதி தற்போது அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    நீதிமன்ற வழக்குகளில் கட்டுமான நிறுவனத்திற்குச் சாதகமான சூழல் ஏற்பட்ட சில நாட்களிலேயே, சுற்றுச்சூழல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் (Ramsar Site - சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம்) பகுதியில், ரூ.2,000 கோடி மதிப்பில் 1,250 வீடுகள் கட்டும் 'பிரிகேட் மார்கன்' திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முன்பு அனுமதி அளித்திருந்தது.

    ஆனால், இந்தத் திட்டத்தை முறைப்படி செயல்படுத்த வேண்டுமெனில் மாநில ஈரநில வாரியத்திடமிருந்து கட்டாயம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். பிரிகேட் நிறுவனம் இந்த அனுமதியை வாங்கத் தவறியதன் காரணமாகவே, தற்போது அதிரடியாக அதன் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பல அடுக்கு குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு எந்த விதமான கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரஸ்னவ் சார்பிலும், அறப்போர் இயக்கம் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

    Advertisement

    இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என கூறப்படும் பகுதியில் குடியிருப்பு வளாக கட்டும் பகுதியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது.

    இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டுமான நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "அந்த இடம் சதுப்பு நிலம் இல்லை. குறிப்பிட்ட இடம் பட்டா நிலம் தான் என்பதற்கு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால், உரிய அனுமதிக்கு பிறகே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. சட்டவிரோதமாக எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ளவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, சதுப்பு நிலத்தை பாதுகாப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள போது, இங்கு விசாரணை நடத்த முடியாது என்பதால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனக் கூறி அதிமுக நிர்வாகி மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதன் காரணமாக, அடுக்குமாடி குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது. நீதிமன்றம் வழக்குகளைத் தள்ளுபடி செய்ததால், இடைக்காலத் தடை நீங்கி கட்டுமானப் பணிகளைத் தொடர பிரிகேட் நிறுவனத்திற்கு வழிவகை ஏற்பட்டது.

    Advertisement

    ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் தான் தற்போது 'ஈரநில வாரிய அனுமதி இல்லை' என்ற காரணத்தைக் காட்டி சுற்றுச்சூழல் ஆணையம் இந்தத் திட்டத்திற்கு ரெட் கார்டு கொடுத்துள்ளது.

    English Summary

    Environmental clearance granted to the Brigade Group's massive apartment project, which was under construction in the Pallikaranai marshland area of ​​Chennai, has now been revoked.