சென்னை: பி எப் பணம் எனப்படும் வருங்கால வைப்பு நிதி ஊதிய உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே ஊழியர்களை, திட்டத்தில் சேர்க்கப்படுவதை தொழில நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சென்னை தெற்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் இது தொடர்பாக அறிவிப்பும் வெளியிட்டுள்ளார்.
சென்னை தெற்கு மண்டல வைப்பு நிதி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி கடந்த 17-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட ஊதிய உச்சவரம்பு, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் முதலாளிகள், உயர்த்தப்பட்ட ஊதிய உச்சவரம்பை கவனத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள அனைத்து ஊழியர்களும் சட்டப்பூர்வ திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்யவேண்டும். இதன் மூலம், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு வசதிகளை பெற முடியும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பின் படி, மாத அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள தொழிலாளர்கள் பிஎப் அமைப்பில் சேருவது கட்டாயமாகும். அவர்களுக்கு இந்த அமைப்பு கட்டாய பாதுகாப்பை வழங்கும். அதுபோல 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை வைத்திருக்கும் நிறுவனமும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த விதிகளின்படி, இதற்கு முன்பு வரை ரூ.15 ஆயிரத்துக்கு மேல் அடிப்படை சம்பளத்தில் சேரும் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்படாமல் இருந்தார்கள். இந்த ரூ.15,000 ஊதிய உச்சவரம்பு என்பது, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு 2004-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை உச்சவரம்பு உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. 2014-ல் ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டதில் இருந்து தற்போது வரை பல மாநிலங்களிலும், பல்வேறு தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமும் தற்போதுள்ள வரம்புக்கு நெருக்கமாக உயர்ந்தது. இந்தநிலையில் 8-வது ஊதியக்குழுவும் விரைவில் வர இருக்கிறது. இதனால் சம்பளம் கணிசமாக உயரும் என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது கட்டமைப்பை புதுப்பித்துள்ளது. அண்மையில் ஊதிய உச்சவரம்பு உயர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த பரிந்துரைகள் மீது அமைச்சகங்களுக்கு இடையே விரிவான ஆலோசனை நடத்தப்பட்டு உரிய முடிவு எட்டப்பட்டது. கடந்த 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஊதிய உச்சவரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்புதலின் மூலம் கூடுதலாக 51 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட உள்ளார்கள். தற்போது சுமார் 8 கோடி தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 82 லட்சம் தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள்.இனி 8 கோடியில் கணிசமான அளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப்போகிறது. அதற்கு தான் நிறுவனங்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.