சென்னை: விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடிப் பதவிப் பறிப்பு நடவடிக்கைகள் உள்கட்சி மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. மாவட்டச் செயலாளர் பதவி மாற்றம் மற்றும் அலுவலகச் சாவி ஒப்படைப்பு விவகாரத்தைத் தொடர்ந்து, இபிஎஸ்ஸின் படத்தை அவமதித்த விசுவாசிகள் நீக்கப்பட்டிருப்பது சண்முகம் தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உள்கட்சி மோதலின் தற்போதைய மையப்புள்ளியாக விழுப்புரம் மாவட்டம் மாறியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு பின், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அதிருப்தி நிலைப்பாட்டை எடுத்தது அதிமுக தலைமையைத் திணறடித்தது. காலப்போக்கில் வேலுமணி தரப்பு இபிஎஸ்ஸுடன் சமரசமாகி ஒருங்கிணைந்த அணியாகச் செயல்படச் சம்மதித்த போதிலும், சி.வி.சண்முகம் தொடர்ந்து தனது எதிர்ப்பைக் காட்டி விலகியே இருந்தார். இதன் தொடர்ச்சியாக, சி.வி.சண்முகம் வசம் நீண்டகாலமாக இருந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த அதிகார மாற்றமே மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்த சலசலப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மாவட்டச் செயலாளர் பதவி கைமாறியதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவதில் 2 தரப்பிற்கும் இடையே கடுமையான போட்டாபோட்டியும் இழுபறியும் நீடித்தது. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதால், கோட்டாட்சியர் முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் பசுபதி தரப்புக்கு வெற்றி கிடைக்க, சி.வி.சண்முகம் தரப்பினர் மாவட்ட அலுவலகச் சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டியதாயிற்று. அந்த சாவியை அதிகாரிகள் புதிய செயலாளர் பசுபதியிடம் வழங்கினர். மாவட்ட அமைப்பின் மீதான தனது பிடி முழுமையாக நழுவிய அந்தச் சமயத்தில்தான், சி.வி.சண்முகம் தனது மயிலம் தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பயணத்தைத் தொடங்கினார். அதேநேரத்தில், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போகிறார் என்ற ஊகங்களும் அரசியல் வட்டாரத்தில் தீயாக பரவி விவாதத்தைக் கிளப்பின. இந்நிலையில், சி.வி.சண்முகத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தின் அருகே ஆதரவாளர்கள் திரண்டு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின்போது, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படத்திற்குத் தார் பூசி அவமரியாதை செய்யப்பட்டது அதிமுகவின் மூத்த தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலைமைக்கு எதிராகக் கட்டுப்பாடு மீறி நடந்த இந்தச் சம்பவம் குறித்து விரிவான புகார்கள் ஆதாரங்களுடன் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உள்கட்சி ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில், இச்சம்பவத்தை மிகக் தீவிரமாக எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, தற்போது சண்முகத்தின் முக்கிய ஆதரவாளர்கள் மீது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கையைப் பாய்ந்துள்ளார். அதன்படி, பொதுச்செயலாளரின் படத்தை அவமதித்த குற்றத்திற்காக விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் கோகுல்ராஜ், அதன் இணைச் செயலர் பாலாஜி, மாவட்ட ஜெ. பேரவை துணைச்செயலர் சக்தி பெரியதம்பி மற்றும் கண்டமங்கலம் ஒன்றிய ஐ.டி. பிரிவு செயலர் சேதுபதி ஆகிய 4 பேரின் கட்சிப் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறப்பித்துள்ளார். சண்முகத்தின் தீவிர விசுவாசிகளாக அறியப்பட்ட இந்த 4 பேரின் நீக்கமும், காலிப் பணியிடங்களுக்குப் புதிய மாவட்டச் செயலாளர் பசுபதியின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டு வருவதற்கும் சி.வி.சண்முகம் தரப்பு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆரம்பத்தில் பேசப்பட்ட எம்.எல்.ஏ பதவி ராஜினாமா மற்றும் தவெக இணைப்பு போன்ற அதிரடி முடிவுகளில் இருந்து தற்காலிகமாகப் பின்வாங்கி, சி.வி.சண்முகம் தற்போது அரசியல் ரீதியாக அமைதி காத்து வருகிறாராம்.. எனினும் மாவட்ட அளவில் தனது ஒட்டுமொத்தப் பிடியும், முக்கிய விசுவாசிகளின் பதவிகளும் பறிபோய் வரும் இந்த இக்கட்டான சூழலில், அவரது அமைதி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், மிக விரைவில் அவர் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைப் பகிரங்கமாக முன்னெடுப்பார் என்றும் விழுப்புரம் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன... பொறுத்திருந்து பார்ப்போம்..!!விழுப்புரம் சிவி சண்முகம்
எடப்பாடி பழனிசாமி அதிரடி
மயிலம் தொகுதிக்கு நன்றி
பாய்ந்த ஒழுங்கு நடவடிக்கை
பசுபதியின் ஆதரவாளர்கள்