சென்னை: அதிமுக பிளவால் மனமுடைந்த தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேந்திரன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் KAS மகேந்திரனின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள்.
மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை அதிமுகவே ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை பொதுச் செயலாளர் தெரிவித்தார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மகேந்திரன் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ 30 லட்சமும், தஞ்சை அதிமுக சார்பில் ரூ 25 லட்சமும் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் யாரும் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்கார தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (32). பூக்கடை நடத்தி வந்தார். இவர் அதிமுகவில் தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் வர்த்தக அணியின் மாவட்ட இணைச் செயலாளராக பொறுப்பில் இருந்தார். இவருக்கு முனீஸ்வரி (32) என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் அதிமுகவில் நிலவி வந்த உள்கட்சி பிரச்சினை, பிளவு உள்ளிட்டவைகளால் மன உளைச்சில் இருந்து வந்த மகேந்திரன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கருத்தை முன் வைத்து தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். முன்னதாக மகேந்திரன், தான் பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ''கட்சியில் நடக்குற பிரச்னைகளைப் பார்க்கும்போது என்னை மாதிரி எளிய தொண்டர்கள் ரொம்ப மனவேதனையுடன் இருக்கிறோம். மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். என்னுடைய இறப்பிற்குப் பிறகாவது கழக தொண்டர்கள், நிர்வாகிகள் ஒன்று சேர வேண்டும். என்னுடன் அரசியலில் பயணித்த நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என் இறப்பிற்குப் பிறகாவது அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். என் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினால் என் ஆத்மா சாந்தியடையும். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மீண்டும் அதிமுகவின் எளிய தொண்டனாக ஆசைப்படுகிறேன்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.