வீரமணி கேஸிலுமா ஸ்டிக்கர்? நிஜத்திலும் விஜய் ஆக்டிங்! நடந்தது என்ன தெரியுமா? அடித்து ஆடும் எடப்பாடி!

  • சென்னை: ஜெம் வீரமணி வழக்கை இழுத்தடித்ததே தவெக அரசு தான் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், தனது உத்தரவின் பேரில் தான் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார் என முதல்வர் விஜய் பேசி வருவதை பார்க்கும் போது சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அவர் நடிக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    செங்கல்பட்டில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," ஜெம் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    Advertisement

    திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தான் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றபோது தகுந்த ஆதாரம் இல்லை. எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்
    என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால் நீதிபதி அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சரானார். காவல்துறை மற்றும் உள்துறை பொறுப்புகள் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 19.06.2026 அன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது காவல் துறை அதிகாரிகள் மீண்டும் வாய்தா கேட்டனர். அப்போது நீதிபதி அவர்கள் நான்கு வாரங்களுக்குப் பிறகு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Advertisement

    காவல்துறை

    அதனைத் தொடர்ந்து 20.06.2026 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. மீண்டும் அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் 27.08.2026 அன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது காவல் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் அரசு வழக்கறிஞர் தடவியல் துறை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

    ஜெம் வீரமணி

    ஆனால் நீதிபதி, பலமுறை அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது தொடர்ந்து நீங்கள் வாய்தா கேட்டுக்கொண்டே இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே சிறுமிகளைச் சீரழித்த ஜெம் வீரமணியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே தவிர முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கைது செய்யப்படவில்லை.

    Advertisement

    முதல்வர் விஜய்

    இதைத்தான் தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார் அரசின் முயற்சியால் அவர் கைது செய்யப்படவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தான் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, முதலமைச்சர் விஜய் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டது அப்பட்டமான பொய். அவர் சினிமாவில் தான் நடிகர். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

    பாலியல் சீண்டல்

    இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் சுமார் 250 கொலைகளும், 300 பாலியல் சீண்டல்களும் நடந்துள்ளன பல சிறுமிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு கடந்த நான்கு மாதங்களில் 300 சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்ட அரசாங்கம் இந்த அரசாங்கம் தான். மேடையில் வீர வசனம் பேசும் முதலமைச்சர். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

    Advertisement

    போக்சோ சட்டம்

    இங்குப் பொதுமக்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. காவல்துறை மீது எந்த அச்சமும் இல்லாமல் சர்வ சாதாரணமாகக் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. அண்மையில் கலைமாமணி பிரகாஷ் சுவாமி அவர்களின் முப்பெரும் விழா நடைபெற்றது. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இந்த ஜெம் வீரமணி அந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார் .அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

    தவெக அரசு

    எனவே ஜெம் வீரமணி வழக்கை இழுத்தடிப்பதற்குக் காரணம் என்ன? இந்த அரசாங்கமே இவருடன் கூட்டாக இயங்குகிறது என்பதுதான் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஏன் அப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை?" என்றார்.

    English Summary

    Edappadi Palaniswami alleges Gem Veeramani was arrested only after a court order, questioning Vijay’s remarks on the case.