ஏது பந்த பாசம்.. எல்லாம் வெளி வேஷம்! யாருமே என் பேச்சை கேட்கலையே! சீனியர்களிடம் புலம்பிய எடப்பாடி!


  • சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட கடுமையான தோல்விக்குப் பிறகு, அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஒருபுறம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் நிலையில், மறுபுறம் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி கட்சியின் நிலையை சீரமைக்கும் பணியில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும், அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் தனது பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை என சக நிர்வாகிகளிடம் புலம்பினாராம் எடப்பாடி..

    Advertisement

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    Advertisement

    இந்தக் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால அரசியல் திட்டங்கள், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதிமுக

    கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறிய தகவலின்படி, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து நேரடியாக தலைமையை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளை முன்வைக்க வேண்டாம் என்று முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால், நிர்வாகிகள் பெரும்பாலும் மாவட்ட அளவிலான கள நிலவரங்கள் மற்றும் கூட்டணி அரசியல் குறித்தே தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
    மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதள பிரசாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று சில நிர்வாகிகள் கூட்டத்தில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

    Advertisement

    திமுக கூட்டணி

    அதே நேரத்தில், அந்தப் பகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வாக்கு வங்கி தான் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகளின் அடிமட்ட நிர்வாகிகள் முழுமையாக இணைந்து செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு எதிராகச் சென்றது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி

    இந்தச் சூழலில், கட்சியில் இருந்து வெளியேறத் திட்டமிட்டு இருப்பதாக பேசப்படும் நிர்வாகிகளை தலைமையே நேரடியாக அழைத்து பேசி சமாதானப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய செயலாளர்கள் சிலர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. சமீப மாதங்களில் அதிமுகவைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது கட்சித் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்களை தடுத்து நிறுத்த தனிப்பட்ட முறையில் பேசியும் அவர்கள் கேட்கவில்லை இதனால், அவர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அதிமுக நிர்வாகிகள்

    "டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கட்சியை மீண்டும் வலுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்களிடம் பேசி எந்தப் பயனும் இல்லை. அவர்களுக்காக கட்சி காத்திருக்காது" என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதிமுகவில் வளர்ந்து பதவி பெற்று, அரசியல் அடையாளம் உருவாக்கிக் கொண்ட பிறகு வேறு கட்சிகளுக்கு செல்வோருக்கு நீண்ட கால மரியாதை கிடைக்காது என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழக வெற்றிக் கழகம்

    சமீப காலமாக அதிமுகவில் இருந்து விலகி ச்த்தில் இணைந்து வரும் நிர்வாகிகளை குறிவைத்து தான் எடப்பாடி இப்படி பேசினார் என்கின்றனர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
    இந்நிலையில், தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள் தலைமைக்கு எதிரான அதிருப்தியும் வெளிப்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், எடப்பாடியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    Advertisement

    அதிமுக தலைமை அலுவலகம்

    இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் சென்னை அதிமுக தலைமை அலுவலகம் அருகே வைத்திருந்த பேனர்கள் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த பேனர்களில் சி.வி. சண்முகத்தை மறைமுகமாக குறிவைத்து கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சில நிர்வாகிகள் பழனிசாமியின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோதும், அவற்றை அகற்றும்படி அவர் எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தேர்தல் தோல்வி

    சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவின் நிர்வாகிகள் வெளியேற்றம், உட்கட்சி முரண்பாடுகள், தலைமை மீதான கேள்விகள் ஆகியவை தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை சோதிக்கும் முக்கிய அரசியல் களமாக மாறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    Edappadi Palaniswami reportedly expresses frustration as AIADMK leaders continue exits and internal dissent after election setback.