ஜெயா டிவி.. நமது எம்ஜிஆர் போச்சு.. நியூஸ் ஜெ, நமது அம்மா இப்போ போயாச்சு! எடப்பாடி கையில் ‘போர்வாள்’

  • சென்னை: அதிமுகவில் உள்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், கட்சியின் புதிய அதிகாரப்பூர்வ நாளிதழாக 'போர்வாள்' அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அம்மா, நியூஸ் ஜெ ஆகியவற்றின் கட்டுப்பாட்டை எஸ்பி வேலுமணி - சிவி சண்முகம் கைப்பற்றியிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளா எடப்பாடி.

    Advertisement

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'போர்வாள்' என்ற புதிய நாளிதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளாக இது செயல்படும் என்று சொல்லியுள்ளனர்.

    Advertisement

    அந்த நாளிதழில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள், கட்சியின் செய்திகள் மற்றும் போராட்டம், ஆர்ப்பாட்ட உள்ளிட்ட தகவல்கள் இதில் தான் இனி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போர்வாள் நாளிதழ்

    இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்று புதிய நாளிதழின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டனர். கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையிலும், "அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமாக 'போர்வாள்' செயல்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி

    இந்த நாளிதழ் வெளியீட்டின் பின்னணியில் அதிமுக உட்கட்சி பூசல் தான் காரணம் என்கின்றனர் அதிமுகவினர். ஏனெனில், இதுவரை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்து வந்த 'நமது அம்மா' மற்றும் 'ஜெ நியூஸ்' தொலைக்காட்சி ஆகியவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மைக் காலமாக அந்த ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிரான செய்திகள் அதிகமாக வெளியாகி வருவதாகவும், அதனால் கட்சி தலைமை அதிருப்தியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியானன.

    Advertisement

    சிவி சண்முகம்

    கடந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் போனதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை திறந்தவெளியில் விமர்சிக்க தொடங்கினர். கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட தவறுகள், தவெகவுடன் கூட்டணி அமையாதது போன்ற காரணங்களால் கட்சி தோல்வியடைந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

    வேலுமணி - சண்முகம்

    இதன் தொடர்ச்சியாக, கட்சிக்குள் இரண்டு அணிகள் உருவாகியுள்ளன. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கம் வேலுமணி - சண்முகம் அணி தனித்த பாதையில் நகர்ந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் தற்போது கட்சியின் ஊடகங்கள் வரை சென்றுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    'போர்வாள்' நாளிதழ்

    இந்த சூழ்நிலையில் 'போர்வாள்' நாளிதழை அறிமுகப்படுத்தியிருப்பது, கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல் பரப்பை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள முக்கியமான அரசியல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் பெயரில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் இனி தனது அணியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சியாக இதை அரசியல் வட்டாரங்கள் விளக்குகின்றன.

    அதிமுக உட்கட்சி மோதல்

    அதேநேரத்தில், இந்த புதிய நாளிதழ் அறிமுகம் அதிமுகவில் உள்ள பிளவை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று வேலுமணி - சண்முகம் அணி வலியுறுத்தி வரும் நிலையில், புதிய நாளிதழ் அறிமுகம் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது ஆதிக்கத்தை உறுதி செய்ய முயற்சி செய்கிறார் என்ற கருத்தும் நிலவுகிறது.

    Advertisement

    நியூஸ் ஜெ, நமது அம்மா

    ஏற்கனவே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இருந்த நமது எம்ஜிஆர் டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஜெயா தொலைக்காட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை அடுத்து தான் நமது அம்மா நாளிதழ் மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நிலையில் அந்த கட்டுப்பாட்டை தற்போது சண்முகம் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Edappadi Palaniswami has launched ‘Porvaal’ as AIADMK’s new official newspaper amid escalating internal conflict over control of party media platforms.