இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்‌ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்!

  • சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, வேட்பாளர் தேர்வு தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக கவனம் செலுத்தி வருவதாகவும், சில தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியல் அவரது கையில் தயாராக இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் வேகமாக மாறியது. பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த தமிழக வெற்றிக் கழகம், அதிமுகவில் இருந்து பல எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றது.

    Advertisement

    பின்னர் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

    திருச்சி கிழக்கு

    இதனுடன் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்ந்து தற்போது ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இடைத்தேர்தலை சாதாரண தேர்தலாக அல்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அதிமுக பார்க்கிறது. குறிப்பாக, தங்களது கட்சியில் இருந்து விலகிச் சென்ற எம்.எல்.ஏ.க்கள் காலி செய்த தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டும் என்ற மனநிலையில் அதிமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    அதிமுக

    அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகையில், தமிழக வெற்றிக் கழக தலைமையிலான ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு எதிர்காலத்தில் மாற வாய்ப்பு இருப்பதாக கட்சி கணித்து வருகிறதாம். எனவே ஆளுங்கட்சி தனது எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்ததாகவும் அதிமுக தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் உள்ள பெருந்துறை மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வேட்பாளர் தேர்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    எடப்பாடி பழனிசாமி

    இந்த இரண்டு தொகுதிகளிலும் உள்ளூர் அளவில் நல்ல அறிமுகம் கொண்டவர்கள், பொருளாதார ரீதியாக வலுவானவர்கள் மற்றும் கட்சிக்காக நீண்டகாலமாக பணியாற்றியவர்கள் என சுமார் ஆறு பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், திருச்சி கிழக்கு தொகுதிய மீதும் அதிமுக தலைமையின் கவனம் திரும்பியுள்ளது. முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அங்கு வலுவான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற திட்டத்தில் பழனிசாமி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    பாமக

    கூட்டணி அரசியல் தொடர்பாகவும் அதிமுக முக்கிய முடிவுகளை எடுக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியை பாமக கேட்டிருந்த போதிலும், அதிமுக வேட்பாளருக்காக அந்த தொகுதியை பழனிசாமி ஒதுக்கவில்லை. ஆனால் தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியை பாமகவுக்கும், அம்பாசமுத்திரம் தொகுதியை பாஜகவுக்கும் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

    அரசியல் பலப்பரீட்சை

    வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டதும், அவர்களை உடனடியாக களத்தில் இறக்கி வீடு தோறும் பிரசாரம், நிர்வாகிகள் சந்திப்பு, வாக்காளர் தொடர்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளை தொடங்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான முதல் அரசியல் பலப்பரீட்சையாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதில் தற்போதைக்கு எடப்பாடி தான் முன்னணியில் இருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.

    English Summary

    AIADMK intensifies bypoll preparations as Edappadi Palaniswami reportedly finalises candidates for five vacant Assembly constituencies.