யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு?

  • சென்னை: தமிழக அரசியலில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் பரபரப்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது, அக்கட்சிக்குள் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 10 மாவட்ட செயலாளர்கள் தவெகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி விரக்தி மனநிலையில் உள்ளாராம்.

    Advertisement

    சமீப காலமாக அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் விஜய் தலைமையிலான கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Advertisement

    இதன் தொடர்ச்சியாக மேலும் சில மாவட்ட அளவிலான நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் தவெக தலைமையை நாடி வருவதாக கூறப்படுகிறது. அதிமுக வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, கட்சியில் இருந்து சிலர் வெளியேறுவதை எடப்பாடி பழனிசாமி மிக சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளாராம்.

    எடப்பாடி பழனிசாமி

    ஆனாலும், "வெளியேறுபவர்கள் வெளியேறட்டும், இருப்பவர்களை வைத்தே கட்சியை வலுப்படுத்த முடியும்" என்ற மனநிலையில்தான் அவர் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தரைமட்டத்தில் நிலைமை வேறுபட்டிருக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில், தொடர்ந்து ஒரே கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது, கட்சித் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

    Advertisement

    தவெக

    தமிழக வெற்றிக் கழகம் தற்போது அமைப்பு ரீதியாக கட்சியை விரிவுபடுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியையும் தனித்தனியாக நிர்வகிக்கும் வகையில் புதிய நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்படலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
    இதனால், அதிமுகவில் உள்ள சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மா.செ. பதவிகளை எதிர்பார்த்து தவெக தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    அதிமுக

    குறிப்பாக, அடுத்த தேர்தலில் வேட்பாளர் வாய்ப்பு, மாவட்ட பொறுப்பாளர் பதவி உள்ளிட்ட உறுதிமொழிகளை எதிர்பார்த்து சிலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம்.

    Advertisement

    மாவட்ட செயலாளர்கள்

    ஆனால் உடனடியாக அமைச்சர் பதவி அல்லது முக்கிய கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படாது என்ற நிலைப்பாட்டை தவெக தலைமை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை ஏற்றுக்கொண்டு மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் அரசியல் முடிவெடுக்க தயாராக இருப்பதாக கூறப்படுவதால், அதிமுக தலைமை கூடுதல் கவனத்துடன் நிலைமையை கண்காணித்து வருகின்றது.

    2026 சட்டப்பேரவைத் தேர்தல்

    தற்போது அதிமுகவில் இருந்து சில முக்கிய முகங்கள் வெளியேறினாலும், கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி இன்னும் கணிசமான அளவில் உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. எனவே, சில நிர்வாகிகள் வெளியேறுவதை மட்டும் வைத்து கட்சி முழுமையாக பலவீனமடைந்துவிட்டதாக கூற முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    அதேநேரத்தில், இளைஞர்களை அதிகளவில் கட்சிக்குள் கொண்டு வருவது, புதிய தலைமுறைக்கு முக்கிய பொறுப்புகளை வழங்குவது மற்றும் உட்கட்சி மோதல்களை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் உடனடியாக தேவைப்படுவதாகவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மறுபுறம், ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கட்சிகளில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் அமைப்பு பலத்தை வேகமாக அதிகரிக்க முயற்சிக்கிறது.

    அதிமுக Vs தவெக

    குறிப்பாக அதிமுகவின் வாக்கு வங்கி மற்றும் களப்பணியாளர்களை தங்கள் கட்சியில் இணைப்பதே அதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. இதனால், வரும் மாதங்களில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான அரசியல் போட்டி இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    English Summary

    Reports suggest several AIADMK district secretaries are in touch with TVK, raising fresh concerns for Edappadi Palaniswami.