சென்னை: அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வாக மீண்டும் செயல்பட அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது ஏன் என்று முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார். தொகுதியில் மக்கள் பிரச்சனையை தீர்க்கவே இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறிய இசக்கி சுப்பையா, தவெக உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா என்ற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா. இதன்பின் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், தவெகவில் ஐக்கியமானார். இதனிடையே நீதிமன்றம் சார்பாக இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடை இன்னும் பல மாதங்கள் நீடிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில் இசக்கி சுப்பையா தரப்பில், அம்பாசமுத்திரம் தொகுதியில் எம்எல்ஏ இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக கூறி, மீண்டும் தொகுதி எம்எல்ஏவாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளித்தார். அதுமட்டுமல்லாமல் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாகும் வரை எம்எல்ஏ-வாக தொடர அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே தாம் அளித்த ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரம் மீண்டும் விவாதமாகி இருக்கிறது. இசக்கி சுப்பையாவின் இந்த செயல்பாடு தவெகவினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக இசக்கி சுப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜினாமாவை என் விருப்பத்தோடு, சுயநினைவோடு, எந்த வற்புறுத்தலும் இல்லாமல் கைப்பட கடிதத்தை கொடுத்தேன். அதனை தீர விசாரித்து சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பையும் செய்தார். அதில் எந்தவித பிரச்சனையும் இல்லை. அதேநேரத்தில் அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்னுடைய ராஜினாமாவை ஏற்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். எதற்காக வழக்கு தொடர்ந்தார் என்று எனக்கு தெரியவில்லை. அந்த அதிகாரம் சபாநாயரிடம் இருக்கிறது. அந்த வழக்கு உடனடியாக முடிந்திருந்தால் பிரச்சனையில்லை. அப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதால், என்னுடைய பதவி ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்ற கேள்வி வருகிறது. அதுவரை என்னை இந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக செயல்பட விடுங்கள்.. மக்கள் பிரச்சனைகளை சரி செய்வதற்காக என்னை செயல்பட அனுமதியுங்கள் என்று சொன்னேன். இதில் சட்ட சிக்கல் இருக்கிறது என்றால், என்னுடைய ராஜினாமாவை திரும்ப பெறவும் தயங்க மாட்டேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அதிமுக தலைமை என்ன என்னை தகுதி நீக்கம் செய்வது.. நானே ராஜினாமா செய்கிறேன் என்று செய்தேன். தவெகவை விரும்ப ஏற்றுக்கொண்டேன். வாய்ப்பு வழங்கப்படும், வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பிரச்சனையில்லை. வேட்பாளராக பார்க்கும் வேலையை விட, வேட்பாளராக இல்லாமல் இருந்தால் இன்னும் அதிக பணி செய்வேன். விஜய் என்ற ஒற்றை முகம் வந்தாலே, இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்தார்.