எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி

  • சென்னை: "உங்கள் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களுக்கே உங்கள் (எடப்பாடி பழனிசாமி) மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல் அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் எங்களிடம் வந்து இணைந்துள்ளனர் என தவெக பதிலடி கொடுத்துள்ளது.

    Advertisement

    'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தஙகளின் ராஜினாமா கடிதத்தை 'தலைமைச் செயலகத்தில்' சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதைக்கூட அறியாத ஒருவர், ஏற்கெனவே பல முறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

    Advertisement

    ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில் சட்டப்பேரவை செயலகத்துக்குத்தான் (Secretariat) வர வேண்டும். அதுதான் ஜனநாயகம் வகுத்த வழிமுறை. இந்த அடிப்படை தெரியாமல் உளற வேண்டியது. தொடர் தோல்விகளால் "எரியுதடி மாலா" என புலம்ப வேண்டாம். சரிந்து வரும் உங்கள் அரசியல் சாம்ராஜ்ஜியத்தை எங்களின் மீது பழிபோட்டு காப்பாற்ற முடியாது.

    ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கட்சியின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.

    Advertisement

    சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்எல்ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.

    கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும். அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மிகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.

    தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள். எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது' என்று தவெக தெரிவித்துள்ளது.

    Advertisement

    அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நேராக அமைச்சர் ஆதவ்வை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தவெகவில் இணைந்தனர்.

    இது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: கீழ்தளத்தில் ராஜினாமா, மேல் தளத்தில் கட்சியில் இணைப்பு, தமிழகத்தில் கீழ்த்தரமான அரசியலை குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்.

    சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், மக்களின் முழுமையான ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் தான் அமைத்த பொய்க்கால் குதிரை ஆட்சியைக் காப்பாற்ற பல்வேறு தகிடுதத்த அரசியலில் ஈடுபட்டு வருவது வெட்கக்கேடான ஒன்றாகும்.

    Advertisement

    தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மோசமான ஒரு குதிரை பேர அரசியலை நடத்தி தான் அமைத்த மைனாரிட்டி ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முனைவது கண்டு தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 126 தொகுதி மக்கள் மக்கள் தனக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்பதை சிறிதும் உணராமல், தான் எந்தக் கட்சியை தீய சக்தி என்று வருணித்த களமாடினாரோ அந்தக் கட்சியின் தயவில் வெற்றி பெற்ற ஒரு சில கட்சிகளை தேடிப் போய் ஆதரவு கேட்டதும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சில சட்டசபை உறுப்பினர்களை சோஃபாவோடு போய் புஷ்பா பட பாணியில் ஆதரவு பெற்றதும் ஒரு நேர்மையான அரசியல்வாதியின் செயலா? என்று வாக்களித்த மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

    Advertisement

    அதிமுக மீது விசுவாசம் கொண்டுள்ள உண்மைத் தொண்டர்களின் கடுமையான உழைப்பால் தியாகத்தால் வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களிடம் இருந்து கோட்டையின் கீழ்தளத்தில் உள்ள சபாநாயகர் அறையில் ராஜினாமா கடிதம் எழுதி வாங்குவதும், அடுத்த 10 நிமிடத்தில் முதல் மாடியில் உள்ள தவெக அமைச்சர் ஒருவரின் அறையில் அவர்களுடைய கைகளில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்குவதும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஓரங்க சதி நாடகத்தை குதிரை பேரத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

    தற்போதைய தவெக அரசின் இது போன்ற தகிடுதத்த வேலைகளை சந்திப்பது தமிழக அரசியலில் புதிதான அணுகுமுறையாகும். எத்தனையோ துரோகச் செயல்களையும் முதுகில் குத்திய நிகழ்வுகளையும் தாங்கித்தான் மக்கள் பணியாற்றி வருகிறது அதிமுக என்ற மாபெரும் பேரியக்கம்.

    இந்த அரசிற்கு முட்டு கொடுக்கக் கூடிய சட்டசபை உறுப்பினர்களாக இருந்தாலும் தற்போது ராஜினாமா செய்துள்ளவர்களாக இருந்தாலும் திரைப் பிரபலத்தின் சின்னத்திற்கு எதிராக மக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. இது போன்ற துரோக செயல்களால் அதிமுகவை அசைத்து பார்க்கலாம், வீழ்த்தி விடலாம், அந்த இடத்திற்கு நாம் வந்துவிடலாம் என யாராவது நினைத்தால் அது பகல் கனவாகவே முடியும்.

    ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல பழைய மந்தையில் புதிய கள் என்பது போல் அடுத்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்வதில்தான் தங்களின் வாழ்வு இருக்கிறது என செயல்படும் புதிய கரகாட்ட கோஷ்டிக்கு தமிழக மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என கண்டித்துள்ளார்.

    English Summary

    TVK has strongly responded to criticism over the joining of MLAs into the party, stating that even their own party legislators no longer have confidence in the leadership.