OPS in TVK?: என்னாது நான் தவெகவில் இணைகிறேனா? யார் சொன்னது? அதிர்ச்சியுடன் கேட்ட ஓபிஎஸ்!

  • சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவதாக வந்த தகவல்களுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். போடி தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருக்கும் ஓபிஎஸ், தேனி மாவட்டத்தில் எம்பியாக இருக்கும் தங்கதமிழ்ச்செல்வனின் ஆதிக்கத்தால் அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் சொல்லப்பட்டன.

    Advertisement

    இதனால் போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என ஓபிஎஸ் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஏற்கெனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள், தவெகவுக்கு தாவலாமா என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    Advertisement

    இந்நிலையில் தவெகவில் இணையவுள்ளதாக வெளியான தகவலை ஓபிஎஸ் மறுத்துள்ளார். அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட ஒற்றை தலைமைக்கு எதிரான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து பொதுக் குழுவினரால் வெளியேற்றப்பட்டார்.

    அதிமுகவை விட்டு வெளியேறியதும் அவர் அதிமுக உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி மூத்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், குன்னம் ராமசந்திரன்,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் பயணித்து வந்தார்.

    அதிமுகவை மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்தும் அவரால் முடியவில்லை. அதிமுகவில் இருந்து விலகியவர்களை சேர்க்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்திய செங்கோட்டையன், ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். இதன் பிறகு, செங்கோட்டையன் திடீரென அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு அவர் தவெகவில் இணைந்தார்.

    Advertisement

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வந்த நிலையில் ஓபிஎஸ் யாருடன் கூட்டணிக்கு செல்வார் என்ற கேள்வி எழுந்தது. தவெகவுடனா திமுகவுடனா என பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டன. ஆனால் ஓபிஎஸ் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்ததால் அதிருப்தி அடைந்த அவரது வலது கரம் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸிடம் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

    அது போல் ஐயப்பன், வெல்லமண்டி நடராஜன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸுடன் இருந்த நிலையில் திடீரென சட்டசபையில் ஸ்டாலினை ஐயப்பன் புகழ்ந்து பேசியதை ஓபிஎஸ் ஆதரித்தார். இதையடுத்து ஓபிஎஸ் சில நாட்களில் திமுகவில் இணைந்தார். அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தும் தந்தையின் வழியை பின்பற்றினார்.

    Advertisement

    இதையடுத்து நடந்து முடிந்த தேர்தலில் போடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். எப்படியும் திமுக ஆட்சியே தொடர்ந்தால் அவர் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக தோல்வி அடைந்து தவெக அரசு அமைந்துவிட்டது.

    அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

    இந்த நிலையில் ஓபிஎஸ் கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் இணைந்த நிலையில் 5 மாதங்களாகியும் அவருக்கு எந்த பதவியையும் கொடுக்காததால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    இதனால் தனது தந்தை ஓபிஎஸ்ஸுடன் போய் தவெகவில் இணைந்துவிடலாம் என ஓபி ரவீந்திரநாத் நச்சரிப்பதாக கூறியதால் அவரும் வேறு வழியில்லாமல் எதிர்கால அரசியலை கருத்தில் கொண்டு தவெகவில் இணைய ஒப்புதல் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கிடைத்தன.

    விரைவில் போடி தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைவார் என சொல்லப்பட்டது.

    தென் தமிழகத்தில் தவெகவுக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொண்டால் அங்கு தவெக வளரும் என நம்பி விஜய்யும், ஓபிஎஸ் மற்றும் ஓபிஆரை தவெகவில் சேர்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்தன.

    Advertisement

    இடைத்தேர்தலில் ஓபிஎஸ்ஸும் 2029 தேனி எம்பி தொகுதியில் ரவீந்திரநாத்தும் போட்டியிடுவார்கள் என சொல்லப்பட்டது. ஆனால் இதை ஓபிஎஸ் மறுத்துள்ளார். தான் தவெகவில் இணைவதாக வெளியான தகவல் தவறானது என தெரிவித்துள்ளார்.

    English Summary

    Ex CM and DMK MLA OPS says that he has no idea to join in TVK. Some are spreading false news regarding his resigns his MLA post.