காவிரி பிரச்சினையில் கடிதம் எழுதிட்டு தூங்க போக கூடாதுனு சொன்ன விஜய் இப்போ அதையே பண்றாரு-அதிமுக!

  • சென்னை: காவிரி விவகாரத்தில் கடிதம் எழுதிவிட்டு தூங்க போகக் கூடாது என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் விஜய் சொன்னாரே, இன்று அவரும் கடிதம் எழுதிகிட்டுதான் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து டெல்டாவிலே கருகும் குருவை சம்பா பயிர்களை பார்க்க இங்கே அழைத்து வருவாரா?

    Advertisement

    இன்றைக்கு காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது. கசாப்பு கடைக்காரர்களிடம் காருண்யத்தை எதிர்பார்க்க முடியுமா? என்கிற பழமொழிதான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது.

    மேகதாது காவிரி நீர் பங்கீடு குறித்து, தமிழக முதல்வர் விஜய் கர்நாடக முதல்வருடன் பேச உள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

    அனுபவம் வாய்ந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இது குறித்து ஆலோசனைகள், அறிவுரைகள் கூறினாலும், நான் மூத்தவர்களின் கூறுகிற அறவழியில் செல்ல மாட்டேன் என்று விஜய் கருதுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Advertisement

    இதுவரை தமிழக அரசுகள் எத்தனையோ முறை கர்நாடக அரசுடன் பேச்சு நடத்திவிட்டன. பேச்சுவார்த்தை மூலம் எந்த பிரயோஜனமும் இல்லை. எந்த பலனும் கிடைக்காததால், நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் தீர்வு காணப்பட வேண்டும் என்று அன்றைக்கே தீர்க்க தரிசனமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காவேரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் சென்று, அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தை டெல்லியில் கூட்டி, தண்ணீரை பங்கிட்டு உறுதி செய்கிறது.

    தற்போது கூட டெல்லியில் நடந்த காவேரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3500 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
    ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு கர்நாடகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

    Advertisement

    மேலும், இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளது கர்நாடகா அரசு. அதோடு, ஆகஸ்ட் 2ல் இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    தற்போது காவிரியில் தண்ணீர் வராததால், டெல்டாவில் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறியிருக்கின்றன. 20க்கும் மேற்பட்ட வருவாய் மாவட்டங்களிலே குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

    காவிரியில் தண்ணீரை விடுவிக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதை காற்றிலே பறக்கவிட்டு, இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு தயாராக இல்லை.

    Advertisement

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, மத்திய அரசு வெளியிட்ட பிறகு, எந்த பேச்சுவார்த்தைக்கும் பலன் தராது என்பது தமிழகத்தில் இருக்கிற எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

    நம்ம முதல்வர் விஜய்க்கு தெரிந்திருக்கும் வாய்ப்பு இல்லையா? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு வரும்போது, காவேரி நீர் பிடிப்பு பகுதிகளை பார்வையிட தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்துள்ளோம் என அந்த மாநில முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    விஜய்யும் டெல்டாவில் கருகும் குருவை சம்பா பயிர்களை பார்க்க கர்நாடகா முதல்வரை அழைத்துக் கொண்டு வந்து, இங்கே பார்வையிடுவதற்கு அழுத்தம் கொடுப்பாரா? இங்கே காய்ந்து கருகி குறுவை சம்பா பயிர்களை காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்து கொள்கிற நிலையிலே இருக்கிற அந்த விவசாயிகளின் பரிதாப நிலையை கர்நாடகா முதல்வர் சிவகுமாருக்கு எடுத்துச் சொல்வாரா?

    Advertisement

    காவிரி பிரச்சனையில் வெறும் கடிதம் எழுதிவிட்டு தூங்கப் போகக் கூடாது உணர்வோடு அழுத்தம் தர வேண்டும் என்று உறக்கச் சொன்ன விஜய், இன்றைக்கு அதே கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதியிருக்கிற தன் பிழையை முதல்வர் விஜய் உணர்வாரா?

    இன்றைக்கு பிரச்சனைகளுக்கு பஞ்ச் டயலாக் பேசி, பஞ்சர் ஆக்குவது என்பது எளிது. ஆனால் அறிவுப்பூர்வமாக, ஆக்கப்பூர்வமாக தீர்வு காண்பது என்பது சவால். அந்த சவாலை இன்றைக்கு எதிர்கொண்டிருக்கிறார் முதல்வர்.

    காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் புஸ்ஸிஆனந்திடம் கேட்டால், சிரித்துக் கொண்டே செல்கிறார். இது தமிழகத்தினுடைய உயிர்நாடி பிரச்சனை. அனுபவம் இல்லாதவர்கள் எல்லாம் அரியணையில் அமர்ந்துவிட்டால், பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பது கூட அடிப்படையான புரிதல் கூட இல்லாத அமைச்சர்களை நாம் பெற்றிருக்கிறோம்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் தான் உச்ச நீதிமன்றம் வரை சென்று நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசியலில் வெளியிட்ட ஜெயலலிதா காவிரி பிரச்சனைக்காக 84 மணி நேரம் தன்னுயிரை பணையம் வைத்து உண்ணாவிரதம் இருந்து அறப்போராட்டத்தை கையில் எடுத்தார்.

    ஆனால் ஒன்று புரிகிறது, தமிழக மக்களே, காவிரி நீர் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், தான் நடித்த ஜனநாயகன் படம் பிரச்சனை இல்லாமல் கர்நாடகாவில் வெளிவர வேண்டும் என்று விஜய் நினைக்கிறாரோ என்னவோ, ஆண்டவனுக்கே வெளிச்சம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English Summary

    ADMK Ex Minister R.B.Udhayakumar criticises CM Joseph Vijay in Cauvery issue.