பழனி கோவில் நிலமோசடி.. நான் குற்றவாளியா? டிவியை பார்த்துதான் எனக்கே தெரியும்! மாஜி சக்கரபாணி விளக்கம்

  • சென்னை: பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் பலர் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சக்கரபாணிக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவில் விவகாரத்துடன் தன்னை தொடர்பு படுத்தி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என விளக்கம் அளித்திருக்கிறார் திமுக முன்னாள் அமைச்சரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி.

    Advertisement

    பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள சுமார் 1ஏக்கர் 40 சென்ட் நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மடம் கட்டவும், இந்து சமயத்தை பரப்பவும் தண்டபாணி என்பவருக்கு வழங்கப்பட்ட இந்த இடம் முறைகேடாக மூன்றாம் நபர்களுக்கு பதிவு செய்யப்பட்டதாக எழுத சர்ச்சையை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    Advertisement

    இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றிருக்கும் நிலையில் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சக்கரபாணிக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டு நிலையில் அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பழனி கோயில் நில விவகாரத்தில் என் பெயரை இணைத்து சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை; ஆதாரமற்றவை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன் என முன்னாள் அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுபவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுடனோ, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையுடனோ, கிரயப் பத்திரத்துடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை.

    Advertisement

    இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாகவே நானும் அறிந்தேன். கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டதை முதலில் கேள்விக்கு உட்படுத்தியதே திமுக தான்; நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் திமுக தான். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என் மீது வீண் வதந்தி பரப்பப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பழனி முருகன் கோயிலுக்குச் செய்யப்பட்ட பணிகள் மக்கள் அறிந்ததே.

    பக்தர்களின் உரிமைகளுக்காகவும், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் திமுக தொடர்ந்து போராடும். அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணையில் உண்மை வெளிவரும். ஆதாரம் இல்லாமல் என் மீது பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான செய்திகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

    English Summary

    Former Minister sakkarapani rejects reports linking him to the Palani temple land scam, calling them false and legally actionable.