எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை?

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் இருவரும் தவெகவில் இணையும் முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எஸ்பி வேலுமணி அணியில் இருந்த இவர்கள் இருவர் மட்டுமே இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவில்லை. இதனால் தவெக தலைமையுடன் இருவருமே ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அதிரடி திருப்பங்கள் தொடர்ந்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    சமீபத்தில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, எஸ்பி. வேலுமணி தலைமையிலான அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் அதிமுகவில் பிளவு இல்லை என்று எஸ்பி. வேலுமணி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இருப்பினும், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த மிக முக்கியமான மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவில்லை. இவர்களின் இந்தத் தனித்த முடிவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    ஆனாலும் எஸ்.பி.வேலுமணி தொடர்ச்சியாக சிவி சண்முகம் தங்களுடன் ஒற்றுமையாக இருப்பதாக கூறி வருகிறார். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் சி.வி.சண்முகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அவர் சமாதானமாகவில்லை. மறுபக்கம் விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

    அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும், தற்போது தவெகவின் உயர்மட்டத் தலைமையுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த ஒரு வாரத்தில் இவர்கள் இருவருமே பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவின் 4 எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

    Advertisement

    இப்போது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தால், தங்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்று இருவருமே தவெக நிர்வாகிகளுடன் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு பெறுவது மட்டுமல்லாமல், அமைச்சர் பதவியும் இவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக விவாதங்கள் அதிகரித்துள்ளன.

    English Summary

    Ex-Ministers CV Shanmugam and C Vijayabaskar Rumoured to Join Vijay’s TVK After Skipping Edappadi Palaniswami Meet