சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சென்னையில் விசித்திரமான எக்ஸ்லேட்டர் எதுவுமே இல்லாத புத்திசாலித்தனமான மற்றும் அற்புதமான வடிவமைப்புடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தை கட்டினார்கள்.ஆனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அப்படி இருக்காது. இந்த சூழலில் மக்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும், அதிநவீன வடிவமைப்புடன் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது. எனவே விரைவு ரயில்களை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் மிக பழமையான ரயில் நிலையம் ஆகும். சென்ட்ரல் ரயில் நிலையம் வடமாநிலம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு முக்கியம் என்றால், எழும்பூர் ரயில்நிலையம், தென்மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவிற்கு முக்கியமான ரயில் நிலையமாக இருக்கிறது. எனவே சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டது. அதற்காக ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள், கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி படிப்படியாக நடந்து வருகிறது.
மறுசீரமைப்பு பணிகள் நடந்தாலும், மக்களையும், ரயில் பயணிகளை பாதிக்காத அளவிற்கே பணிகள் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. எனினும் தண்டவாளப்பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும் போது மட்டும் நடைமேடைகளை மூட வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக அப்போது மட்டும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் முதல் 5 நடை மேடைகளை அகலப்படுத்தி நவீனப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இந்த பணிக்காக, தாம்பரம் நிலையத்துக்கு விரைவு ரயில்கள் மாற்றம் கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு செப்டம்பர், டிசம்பரில் அடுத்தடுத்த கட்டங்களாக மற்ற விரைவு ரயில்களும் தாம்பரம் முனையத்துக்கு மாற்றப்பட்டிருந்தன. இதன்பிறகு, ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படியே பெரிய நடைமேம்பாலம் அமைக்க முதல்கட்ட பணிகள் நடப்பாண்டில் பிப்ரவரியில் தொடங்கியது. இதற்காக உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் போன்ற சில முக்கிய விரைவு ரயில்கள் பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை தாம்பரம் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டன. அதேபோல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை பிப்ரரி 20 முதல் ஏப்ரல் 3 வரை 43 நாட்களுக்கு தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிறகு, முக்கிய பணிகள் முடிந்த பிறகு, எழும்பூர் நிலையத்தில் இருந்து விரைவு ரயில்களின் இயக்கம் சீரானது. இந்நிலையில், 3-ம் கட்டமாக, இரும்பு நடைமேம்பாலப் பணிகளுக்காக, சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நடைமேம்பாலம் அமைக்க, 500 டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. அதன் மூலம் இரும்பு கர்டர்கள் நிறுவப்பட இருக்கிறது. இந்த நடைமேம்பாலம் 18 மீட்டர் அகலத்துடனும், 120 மீட்டர் நீளத்துடனும் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் எங்கு அமைகிறது என்றால், காந்தி இர்வின் சாலை பகுதியில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரையில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே எழும்பூரில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் மீண்டும் தாம்பரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "நடைமேம்பாலம் அமைக்கும் பணியால், சில விரைவு ரயில்களை தாம்பரத்துக்கு மாற்றுவது தொடர்பாக, தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பிறகு மாற்றம் செய்வோம் என்றார். இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகறிது. பயணிகளுக்கு எவ்வித தொந்தரவு இல்லாமல், ரயில் சேவையை மாற்ற நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டள்ளது. மின்சார ரயில்களை 5, 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே திட்டமிட்டு வருகிறது. எத்தனை நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்பது குறித்து தகவல்கள் இல்லை. எனவே மீண்டும் சில வாரங்கள் ரயில் சேவை பெற எழும்பூர் போக வேண்டிய நிலை ஏற்படலாம்.