ஆட்சிக்கு வந்ததுமே ஆட்டம்.. மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகள்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார்!

  • சென்னை: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆகியுள்ள நிலையில், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கட்டாய மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளதாக எழுந்துள்ள புகார் அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    பாதிக்கப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், மாமூல் கேட்ட தவெக நிர்வாகிகளைப் பிடித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்

    தமிழகத்தில் செங்கல் சூளைகள் அதிகம் உள்ள வேலூர் மாவட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக தங்களை தவெக நிர்வாகிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் சூளைகளுக்கு நேரடியாகச் சென்று மாமூல் கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

    தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் ஆகியோர் வேலூர் மாவட்டம் கணியம்பாடி புதூர் பகுதியில் செங்கல் சூளை உரிமையாளர்களைச் சந்தித்து, கட்சி வளர்ச்சி நிதியாக கட்டாயமாகப் பெரும் தொகையை மாமூலாகத் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    இதற்கு மறுப்புத் தெரிவித்த சில உரிமையாளர்களை, "ஆட்சியில் இருப்பது எங்கள் கட்சி, நாங்கள் சொல்வதைக் கேட்காவிட்டால் சூளைகளை நடத்த விடமாட்டோம்" என ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், தொழிலாளர்களை வேலை செய்யவிடாமல் தடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    சுற்றி வளைத்துப் பிடித்த உரிமையாளர்கள்

    மாமூல் கேட்டு தொடர் மிரட்டல்களால் செங்கல் சூளை உரிமையாளர்கள், தங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து வரும் தவெக நிர்வாகிகளை சுற்றி வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். செங்கல் சூளையில் மாமூல் கேட்டு தவெக நிர்வாகிகள் மிரட்டிய வீடியோவுடன் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

    "ஏற்கனவே பல்வேறு நஷ்டங்களுக்கு இடையே தான் இந்தத் தொழிலை நடத்தி வருகிறோம். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள புதிய கட்சியின் பெயரைக் கூறிக்கொண்டு சிலர் வந்து மாமூல் கேட்டு மிரட்டுவது எங்களுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மிரட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Advertisement

    திமுக பாய்ச்சல்

    "இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்.. யாரையும் தப்பு செய்ய விட மாட்டான் என வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்களே உங்க கட்சி நிர்வாகிகள் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் கேட்கும் லட்சணத்தை பாருங்க.." என திமுக ஐடி விங், இந்த வீடியோவை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

    பல்லாவரம் பழக்கடையில்

    இதேபோல, பல்லாவரத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள பழக்கடையில் எம்.எல்.ஏவின் பி.ஏ எனக் கூறி தவெக நிர்வாகி ஒருவர் மிரட்டியுள்ளார். பழக்கடைக்காரர் அவரை பிடித்து அமர வைத்த நிலையில், அவர் கட்சி நிர்வாகியிடம் போனில் பேசி, செல்வாக்கை காட்ட முயன்றுள்ளார். விசாரணையில், அந்த நபர் தவெக பல்லாவரம் எம்.எல்.ஏ காமாட்சியின் கணவரின் உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Just days after the TVK government, led by Chief Minister Vijay, assumed office in Tamil Nadu, allegations have surfaced that certain functionaries belonging to TVK have threatened brick kiln owners while demanding extortion money; this complaint has created a major sensation within political and industrial circles.