சென்னை: சென்னை நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் வீடற்ற நிலையை போக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாகப் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், ஏழை மக்களுக்காக கட்டப்படும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்குக் கூடுதல் தளபரப்பு குறியீடு (FSI - Floor Space Index) பெறுவதற்கு வாரியம் இப்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின்படி, ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அது கட்டிப்படும் நிலத்தின் பரப்பளவிற்கு ஏற்ப FSI எனப்படும் தளபரப்பு குறியீடு தெளிவான விதிகளுடன் வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நிலத்தில் எவ்வளவு பரப்பளவில் கட்டிடம் கட்டலாம் என்பதற்கான அளவீடுதான் இந்த எஃப்.எஸ்.ஐ ஆகும்.
உதாரணத்திற்கு, 2400 சதுரடி அளவுள்ள ஒரு நிலம் இருக்கிறதென்றால், அதில் 4800 சதுரடி பரப்பு வரை கட்டிடம் கட்ட FSI அனுமதிக்கிறது. அப்படியானால் டபுள் மடங்கு பரப்பளவில் அப்பார்ட்மென்ட்டை கட்டிக் கொள்ள முடியும். பெரிய அளவிலான அடுக்குமாடி திட்டங்களை பொறுத்தவரை, அந்த மனை அமைந்திருக்கும் அளவு, அதன் முகப்பு அளவு மற்றும் அதனையொட்டி அமைந்துள்ள அணுகு சாலையின் அகலம் போன்றவற்றின் அடிப்படையில் இந்த தளபரப்பு குறியீடு மாறுபடும்...இதன் அடிப்படையில் அதிகபட்சமாக 3.25 மடங்கு வரை FSI கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படுகிறது. தனியார் கட்டுமான நிறுவனங்களை பொறுத்தவரை, தங்களது திட்டங்களுக்கு அதிக FSI தேவைப்படும் பட்சத்தில், அரசுக்கு உரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி அதனை ஈஸியாகவே பெற்று கொள்கின்றன. ஆனால் ஏழை மக்களுக்காக அரசின் மானிய உதவியுடன் குறைந்த செலவில் வீடுகளை கட்டித் தரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், கூடுதல் கட்டணம் செலுத்தி இந்த FSI குறியீட்டை வாங்க முடியாத நிதி நெருக்கடி நிலைமை உள்ளது.. இப்படியான சிக்கலுக்கு முடிவு கட்ட, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஒரு புதிய வழிமுறையை உருவாக்கியுள்ளது. அதன்படி, வாரியத்திடம் காலியாக இருக்கும் நிலங்களை பூங்கா போன்ற பொதுப் பயன்பாட்டிற்கு அரசுக்கு கொடுத்தால், அதற்கு பதிலாகக் கூடுதல் கட்டிடம் கட்டும் அனுமதியை அரசு இலவசமாக வழங்கும்.. இந்த சலுகையை பயன்படுத்தி, தங்கள் திட்டங்களுக்குக் கூடுதல் FSI பெற வாழ்விட மேம்பாட்டு வாரியம் இப்போது முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதுகுறித்து நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, -ஏழை மக்களுக்கு அதிகளவில் வீடுகளை கட்டித்தர வேண்டிய தேவை இருப்பதால், அடுக்குமாடி திட்டங்களுக்குக் கூடுதல் FSI பெறுவது அவசியமாகியுள்ளது. எனவே, வாரியத்திடம் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள காலி நிலங்களை பொதுத் திட்டங்களுக்கு வழங்கி கூடுதல் FSI பெறுவதோடு, அரசு தரப்பிலிருந்தும் இதற்கான ஸ்பெஷல் சலுகைகளை பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.. இதன் மூலம், கூடுதல் நிதிச்சுமையோ செலவோ இல்லாமல், ஏழை மக்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அடுக்குமாடி திட்டங்கள்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சூப்பர் முடிவு
ஏழை மக்களுக்கு ஸ்பெஷல் சலுகைகள்