விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் கடன்.. கூட்டுறவு வங்கியில் 9% வட்டி.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

  • சென்னை: விவசாயம் செய்யவும், விவசாயம் சார்ந்த தொழில்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் பணம் தேவைப்படும் விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவும் வருஷத்துக்கு 9 சதவீத வட்டியில் இந்த கடன் கிடைக்கும். மொத்தம் ரூ.5000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், யாருக்கெல்லாம் முன்னுரிமை கிடைக்கும் தெரியுமா?

    Advertisement

    தமிழ்நாடு அரசின் 2026-2027ம் நிதியாண்டுக்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், ஊரகத் தொழில் கடன் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    9 சதவீத வட்டி

    விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    இந்த கடனை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெறலாம். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக மத்திய காலக் கடன்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் கிடைக்கும்.

    இந்த திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்கள், ஆண்டுக்கு 9 சதவீத வட்டி செலுத்த வேண்டும். கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து 36 மாதங்களுக்குள், அதாவது 3 வருடங்களுக்குள், வட்டியுடன் சேர்த்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

    Advertisement

    தவணை சலுகை காலம்

    இதில் விவசாயிகளுக்கு ஒரு சலுகையும் உள்ளது. தேவைக்கேற்ப 3 முதல் 6 மாதங்கள் வரை தவணை சலுகைக் காலம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்களில் வருமானம் கிடைக்க சிறிது காலம் ஆகலாம் என்பதால், இந்த அவகாசம் பயனுள்ளதாக இருக்கலாம். இருப்பினும், சலுகைக் காலம் யாருக்கு, எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை சம்பந்தப்பட்ட கூட்டுறவு அமைப்புகளிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ரூ.5000 கோடி

    இந்த திட்டத்தில் 2026-2027ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.5,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.2,000 கோடியும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.3,000 கோடியும் வழங்கப்பட உள்ளன.

    Advertisement

    ஆனால், அறிவிப்பு வெளியானதுமே அனைவருக்கும் உடனடியாகக் கடன் கிடைத்துவிடும் என்று நினைக்க வேண்டாம். கடன் வழங்குவதற்கான மாதிரி ஒழுங்குமுறை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் உரிய அங்கீகாரம் பெற்று கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கூட்டுறவு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் குறு, சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்

    யாருக்கு முன்னுரிமை?

    இந்த திட்டத்தில் குறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் விளிம்புநிலைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், விண்ணப்பிப்பவர்களின் கடன் தகுதியைச் சரிபார்த்து, உரிய விதிமுறைகளின்படியே கடன் வழங்க வேண்டும் என்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    கடன் வழங்கிய பிறகு, அதைத் திருப்பிச் செலுத்துவதையும் வசூல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழிலுக்குக் கடன் தேவைப்படும் குறு, சிறு விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை அணுகி, விண்ணப்ப நடைமுறை, தேவையான ஆவணங்கள், கடன் தகுதி மற்றும் சலுகைக் கால நிபந்தனைகள் குறித்து விசாரித்து தெரிந்துகொள்ளலாம்.

    English Summary

    Farmers Loan Scheme: Rs 5 Lakh at 9% Interest! Who Can Get This Big Benefit Through Cooperative Banks?