சென்னை: நகரங்களில் வீடு கட்டுவோர், கட்டிடம் கட்டுவோர் பிளான் அப்ரூவலுக்கு அலைய வேண்டியது இனி இல்லை.. ஃபைல்களை நகர வைக்க லஞ்சம் கொடுக்க தேவையும் இனி ஏற்படாது. ஏனெனில் அதற்காகவே விரைவில் வேலை முடியும் வகையில் ஒரு நல்ல சிஸ்டத்தைக் கொண்டு வர முதல்வர் விஜய் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் கட்டிடத் திட்ட அனுமதி வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்த, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஏஐ மூலம் இயங்கும் ஒரு சாப்ட்வேரை தமிழக அரசு உருவாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் பெரிய வீடு கட்டுவோர், பெரிய பில்டிங் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவோர் பிளான் அப்ரூவலுக்கு மாசக்கணக்குல அலைய வேண்டிய அவசியம் இனி நிச்சயம் ஏற்படாது என்று அரசு ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். என்ன சார் சொல்றீங்க.. சிஸ்டத்தையே மாற்றினால் தானே இது சாத்தியம்.. சிஸ்டத்தையே மாற்றப்போகிறார்களா என்றால். ஆம்.. முதல்வர் விஜய் தலைமையிலான அரசு சிஸ்டத்தையே மாற்றபோகிறது. 'செயற்கை நுண்ணறிவு' தொழில் நுட்பத்துல இயங்கும் ஒரு புது சாஃப்ட்வேரை தமிழக அரசு தயாரித்து வருகிறது. எல்லா விதிகளுக்கும் உட்பட்டு சரியா விண்ணப்பித்தால், உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.
இதுபற்றி அரசு வட்டாரங்கள் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களுக்கு எவ்விதத் தாமதமும் இன்றி கட்டிடத் திட்ட அனுமதிகளை வழங்குவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதற்கேற்ப, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி வருகிறது. இந்த புதிய அமைப்பு விண்ணப்பங்களை மிகவும் திறமையாகக் கையாளும். கட்டிடத் திட்ட அனுமதி வழங்குவதற்கான கால அளவைக் குறைக்கும் என்று அரசு நம்புகிறது. அண்மையில் சென்னை பெருநகரப் பகுதியில் அமையும் உயரமான கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி இனி நேரடியாகச் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் வழங்கப்படும்; இதனால், உயரமான கட்டிடங்களுக்கான குழுவின் ஆய்வுக்குப் பிறகு அரசின் இறுதி அனுமதி பெற வேண்டிய அவசியம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் திங்கட்கிழமை (ஜூன் 15, 2026) தேதியிட்ட இந்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னதாக, 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகள் 2019'-ன் கீழ், சென்னை பெருநகரப் பகுதியில் அமையும் உயரமான கட்டிடங்களுக்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஒரு குழுவின் பரிந்துரைகளுடன் ஒப்புதலுக்காக மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியில் அரசு முடிவெடுத்து வந்தது. இப்போது சிஎம்டிஏவே அனுமதி வழங்கும் என்பதால், விரைவில் அனுமதி கிடைக்கும்.